2022 ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை எனவும் அணித்தலைவர் பாபர் அஸாமிடமிருந்து மிகச் சிறந்த ஆட்டமொன்றை நாம் காணப்போகிறோம் என தான் எண்ணுவதாகவும் அவ்வணியின் ஆலோசகரான அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

இத்தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூ ஸிலாந்தும் நாளை  புதன்கிழமை மோதவுள்ளன. இந்நிலையில், சிட்னியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் மெத்யூ ஹைடன் இவ்வாறு கூறினார்.

இத்தொடரில் பாகிஸ்தான் அணி நெருக்கடியிலிருந்த நிலையில், சுப்பர் 12 கடைசி நாள் போட்டியொன்றில் தென் ஆபிரிக்காவை எதிர்பாராத விதமாக நெதர்லாந்து தோற்கடித்தமை பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பை இலகுவாக்கியது.

இது குறித்து மெத்யூ ஹைடன் கூறுகையில், அது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது. ஆனால், நாம் (பாகிஸ்தான் அணி) எமது சிறப்பான ஆட்டத்தை ஆடவில்லை என நான் உண்மையாக நம்புகிறேன். அது எதிரணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்’ என்றார்.

103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 161 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய மெத்யூ ஹைடன், ஆக்ரோஷமான ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளங்கியவர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாமின் ஆற்றல் குறித்து ஹைடன் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தொடரின் 5 போட்டிகளில் 39 ஓட்டங்களையே பாபர் அஸாம்  பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாபர் அஸாம் குறித்து ஹைடன் கூறுகையில், ‘பாபர் சில கஷ்டங்களை எதிர்கொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது அவரை மேலும் சிறந்த வீராகவே உருவாக்கும்.

வானிலை அமைதியாக இருந்தால், அடிக்கடி அதைத் தொடர்ந்து புயல் வரும், எனவே பாபரிடமிருந்து  மிக விசேடமான ஒன்றை நாம் பார்க்கவுள்ளோம் என எண்ணுகிறேன்’ என்றார்.

பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் அணி வென்ற பின்னர், அணி வீரர்கள் மத்தியில் உரையாற்றிய மெத்யூ ஹைடன், பாகிஸ்தான் அணி இப்போது மிக ஆபத்தானது. ஏனைய அணிகள் அதைப் பார்த்து பயப்படுகின்றன என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நியூஸிலாந்து அணி குறித்து மெத்யூ ஹைடன் இன்று கூறுகையில்,

எதிரணிகளை துடுப்பாட்டத்தினால் அழுத்தத்துக்கு உள்ளாக்கக்கூடிய வீரர்கள் நியூ ஸிலாந்து அணியில் உள்ளனர். அவர்களிடம் சிறந்த சமநிலையான பந்துவீச்சு வரிசையும் உள்ளது.

சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசையும் உள்ளது. அனுபவம் மிக்க வீர்ரகள், போட்டிகளை வெல்லக்கூடிய வீரர்கள் அவர்களிடம் உள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *