பிரதான கழக கிரிக்கெட் இறுதிப் போட்டி: தமிழ் யூனியன் 588, சிசிசி 149 – 2 விக்

(நெவில் அன்தனி)

மிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கழகத்துக்கும் கலம்போ கிரிக்கெட் கழகத்துக்கும் (CCC) இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் பிரதான கழகங்கள் (Major League Cricket) இறுதிப் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளது.

முதலாவது இன்னிங்ஸில் தமிழ் யூனியன் பெற்ற 558 ஓட்டங்களுக்கு பதிலளித்து, துடுப்பெடுத்தாடி வரும் சிசிசி நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஆரம்ப வீரர் சொனாலி தினுஷ்க 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 8 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் நிமேஷ குணசிங்க (33), மினோத் பானுக்க ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து  சிசிசி அணியை உற்சாகப்படுத்தினர்.

நிமேஷ ஆட்டமிழந்த பின்னர் மினோத் பானுக்கவும் கமிந்து மெண்டிஸும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தியுள்ளனர்.

மினோத் பானுக்க 72 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்து தொடர்ந்த தமிழ் யூனியன் சகல விக்கெட்களையும் இழந்து 588 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்த டிலும் சதீர 32 ஓட்டங்களையும், ரவிந்து ஃபெர்னாண்டோ 45 ஓட்டங்களையும் பெற்று இரண்டாம் நாள் காலை ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தொடர்ந்து டிலும் பெரேராவுடன் 7ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்த இசுறு உதான, 8ஆவது விக்கெட்டில் கவிந்து பத்திரட்னவுடன் மேலும் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இசுறு உதான 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும், கவிந்து பத்திரட்ன 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

சிசிசி பந்துவீச்சில் விஷ்வா ஃபெர்னாண்டோ 102 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லக்ஷான் சந்தகான் 128 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

3ஆம் நாள் ஆட்டம் இன்று சனிக்கிழமை (நவ 19) தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *