( வாஸ் கூஞ்ஞ) 11.10.2022
பிள்ளைச் செல்வம் என்பது இறைவனின் ஆசீர்வாதம். புpள்ளைகள் இல்லாத பெற்றோரின் துன்ப நிலையை நீங்க்ள உணர்வீர்கள். ஆகவே பிள்ளைகளை நீங்கள் உங்களுக்கு பாரம் என்று சொல்லக்கூடாது. ஆசிரியர்களும் இந்த பிள்ளைகளால் எமக்கு தொல்லை என்று எண்ணக்கூடாது என பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கில் இயங்கி வரும் சென் மேரிஸ் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செவ்வாய் கிழமை (11.10.2022) அலய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் மேலும் தெரிவிக்கையில்
கடவுளிடமிருந்து நாம் அறிவை பெற்றுக் கொள்கின்றோம். அவருக்கு ஏற்ற விதத்தில் நாம் வாழ்ந்து கொள்ள வேண்டும்.
இறைவனின் ஸ்தானத்தில் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இந்த சிறார்களை பராமரிப்பது இவர்களுக்கு கற்றுக் கொடுப்பது ஒரு இலகுவான விடயம் அல்ல.
கற்றுக் கொடுப்பதைவிட இவர்களுடன் இருந்து இவர்களை பராமரிப்பது மிகவும் ஒரு கடினமான பணி.
நாம் யாவரும் கடினமான பணியில் ஈடுபட்டாலும் இந்த சிறார்களுடன் இருந்து செயல்படும் ஆசிரியர்கள் இதற்கு மேலானாவர்கள்.
இதன் காரணமாகவே பெற்றோர் பெரியோர் நாம் ஒன்றித்து இவர்களை வாழத்தி கௌரவிக்கின்றோம். இன்றைத் தினத்தில் இவர்களுக்கு நாம் நன்றியை தெரிவித்து நிற்கின்றோம்.
இந்த ஆசிரியர்கள் செய்து வரும் மிக உயர்ந்த பணிக்காக இவர்களுக்கு இன்றையத் தினம் நன்றி கூறுகின்றீர்கள்.
பெற்றோராகிய நீங்கள் இன்று பலதரப்பட்ட வேலைகளின் மத்தியிலும் உங்கள் பிள்ளைகளை இவ் முன்பள்ளி பாடசாலைக்கு அழைத்து வந்து அவர்களை நல்ல வழியில் வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றீர்கள்.
பிள்ளைச் செல்வம் என்பது இறைவனின் ஆசீர்வாதம். புpள்ளைகள் இல்லாத பெற்றோரின் துன்ப நிலையை நீங்க்ள உணர்வீர்கள். ஆகவே பிள்ளைகளை நீங்கள் உங்களுக்கு பாரம் என்று சொல்லக்கூடாது.
ஆசிரியர்களும் இந்த பிள்ளைகளால் எமக்கு தொல்லை என்று எண்ணக்கூடாது. இவர்கள் இறைவன் எமக்கு தந்த சொத்துக்கள் என உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவர்கள்தான் எமக்கு எதிர்காலம். ஐந்து வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள் ஆகவே இந்த முன்பள்ளி பல சவால்களுக்கு மத்தியிலும் இந்த சிறார்களை நன்கு பயிற்று பராமரித்து வருகின்றனர் இந்த ஆசிரியர்கள்.
இந்த பிள்ளைகளுக்கு உலக அறிவோடு இறை அறிவையும் நாம் வழங்கி அவர்களை வளர்தெடுக்க வேண்டும் என்றும் வாழ்த்தி நிற்கின்றேன்.
நன்றி என்பது கடவுளின் தொடக்கம் அதற்கமைய நாம் கண்கண்ட தெய்வங்களாக விளங்கும் இந்த ஆசான்களுக்கு நன்றி செலுத்த ஒன்றித்த பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் நற்றி கூறுகின்றேன் என்றார்.