தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தினால் உயிரிழக்கும், பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் எவரும் கவனத்தில் கொள்வதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மலையக சமூகம் எப்போதும் பின்தங்கிய சமூகம் அல்ல. இலங்கையின் ஒரு இனமான அவர்களுக்கு ஏனையோர் போல சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.
அண்மையில் கொரியாவில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த விடயம் முழு நாட்டினதும் பேசு பொருளாக மாறியது.
எனினும், கனவரல்ல மற்றும் டயகம கிழக்கு தோட்டப்பகுதிகளில் அதே காலப்பகுதியில், தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தினால் உயிரிழந்த தோட்ட தொழிலாளர்கள் குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.
பெருந்தோட்ட சமூகம் இயல்பாகவே ஒதுக்கப்பட்டதொரு சமூகம் அல்லவென்றும், அந்த சமூகத்துக்கான வசதிகள் மறுக்கப்பட்டு திட்டமிடப்பட்ட வகையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.