(எம்.ஆர்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கு ஆணைக் குழுக்கள் தேவையில்லை நடைமுறையில் நிலவும் பாரபட்சம் நீக்கப்பட்டால் அனைவரும் சமமாக வாழ்வதற்கான வழி பிறக்கும்.பெருந்தோட்ட மக்களை அரசியல் நீரோட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நம் ஜனாதிபதிக்கு முன் வைத்துள்ளோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வடகிழக்கு மக்களின் பிரச்சினை ,மலையக மக்களின் பிரச்சினை என பல வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும்.
மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது.தமது அரசியல் சுயநலங்களுக்காக மக்களை பகடைக்காய்களாக பாவிக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் வன்மையான கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவற்றுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளை இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இனவாதிகள் ஓரம் கட்டப்பட வேண்டும்.இந்த நாட்டு மக்கள் எவரும் பகைவர்களாக நாட்டில் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் நோக்கத்திற்காக அவ்வாறு மக்களை பயன்படுத்துபவர்கள் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்.
நாடு மிகவும் நெருக்கடி நிலையை சந்தித்த தருணத்திலேயே துணிச்சலாக இந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். அவருக்கு 25 வருட தொலைநோக்கு காணப்படும் நிலையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர் தற்போது அடித்தளமிட்டு வருகின்றார்.
அதற்காக கட்சி, இன,மத, மொழி பேதமி ன்றி அனைவரும் அவருக்கு கை கொடுக்க வேண்டும்.பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் காணப்படுவதால் அதற்கான முழுமையான ஒத்துழைப்பை அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டும்.
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கு ஆணைக் குழுக்கள் தேவையில்லை நடைமுறையில் நிலவும் பாரபட்சம் நீக்கப்பட்டால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது பாரபட்சம் நீக்கப்பட்டாலே அனைவரும் சமமாக வாழ்வதற்கான வழி பிறக்கும் இனவாதத்துடன் செயல்படுபவர்கள் அரசியலிலிருந்தே ஓரங்கட்டப்பட வேண்டும் பெருந்தோட்ட மக்களை அரசியல் நீரோட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் ஜனாதிபதிக்கு முன் வைத்துள்ளோம்.