(இராஜதுரை ஹஷான்)
தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தோல்வி. 24 ஆம் திகதி மாத சம்பளம் பெறும் போது வெட்கப்படுங்கள், பெறும் சம்பளத்திற்காவது அரச சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த 24 மணி நேர பணிபுறக்கணிப்பு போராட்டம் தோல்வி என்று குறிப்பிட வேண்டும். பொது போக்குவரத்து சேவை ஸ்தம்பிதமடைந்தால் மாத்திரமே போராட்டங்கள் வெற்றி பெறும்.
புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பு செய்ததால் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையவில்லை. பெரும்பலான புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
வழமைக்கு மாறாக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தினோம். புகையிரத சாரதிகள் இன்றும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டால் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. சித்திரை புத்தாண்டுக்கு உழைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு தொழிங்சங்கங்களும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ஒரு அரசியல் கட்சிக்கு சார்பாக செயற்படுகிறது,அது அவரவர் அரசியல் உரிமை. கடந்த ஆண்டு நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை சற்று எண்ணிப்பார்த்து மனசாட்சியுடன் தொழிற்சங்கங்கள் செயற்பட வேண்டும்.
மாதம் இலட்சக்கணக்கில் வருமானம் பெறும் தரப்பினர்களின் ஒரு சதவீதமானோர் கூட நேற்று வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடவில்லை.ஒருசிலர் ஏன் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்பதை அறியாமல் தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்டார்கள்.
ஆகவே தொழிற்சங்க போராட்டம் தோல்வி. 24 ஆம் திகதி சம்பளம் பெறும் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.அரச சேவையாளர்கள் மாதம் பெறும் சம்பளத்திற்காகவாவது அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.