
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேயை சந்திப்பதற்காக அண்மையில் தாம் தங்காலைக்கு சென்றதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
எனினும் அவர் கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தாம் கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு சென்ற போது அங்கிருந்த அதிகாரி, புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவரை சந்திக்க முடியாதென்று குறிப்பிட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இதன்போது வசந்த முதலிகே பயங்கரவாதியா என தாம் அவரிடம் கேட்டப்போது, பயங்கரவாதியை கண்டுப்பிடிப்பதற்காகவே அவரை தடுத்து வைத்திருப்பதாக காவல் துறை அதிகாரி தம்மிடம் கூறினார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
இவ்வாறு, கூறப்படும் போது நாட்டில் எதற்காக குற்றப்புலனாய்வுத்துறை கடமையில் இருக்க வேண்டும் என சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, தாம் கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போது தமக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதி தகுதியற்றவராக இருந்தார்.
தமது பதவிநிலையுடன் ஒப்பிடுகையில் இரண்டு பதவி நிலைகளில் குறைந்த ஒருவரே அந்த அமர்வுக்கு நீதிபதியாக இருந்தார்.
சாதாரண நீதி நடைமுறைக்கமைய இராணுவ நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சுமத்தப்படுகின்றவரை காட்டிலும், அதனை விசாரணை செய்பவர் உயர் பதவி நிலையில் இருக்க வேண்டும்.
எனினும் தமது விடயத்தில் அது கடைபிடிக்கப்படாமையால் அந்த விசாரணையை காட்டு நீதி என்று தாம் கருதுவதாக சரத்பொன்சேகா தெரிவித்தார்.
அத்துடன், இராணுவ நீதிமன்றம் இலங்கையின் நீதிமன்ற அமைப்பிற்குள் வருவதாக கூறப்பட்டு தமக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இராணுவ நீதிமன்றம் என்பது இராணுவக் கட்டமைப்பை முன்னெடுத்துச்செல்லும் ஒரு அமைப்பே அன்றி இலங்கையின் நீதிமன்ற துறைக்குள் வருகின்ற அமைப்பு அல்ல என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இதற்கிடையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக முன்னெடுத்த சட்டத்தரணிக்கு, பின்னர் வந்த காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதியரசர் பதவி வழங்கப்பட்டதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.