(நெவில் அன்தனி)

குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி. வை. பட்டில் பயிற்சியக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மாரிஸ்ஆன் கெப் பதிவு செய்த சாதனைமிகு 5 விக்கெட் குவியலும், ஷஃபாலி வர்மா குவித்த சாதனைமிகு அரைச் சதமும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு 10 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

அவர்கள் இருவரும் மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டுக்கான புதிய மைல்கல் சாதனைகளை நிலைநாட்டினர்.

மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின்னர் இந்த வெற்றி டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த குஜராத் ஜயன்ட்ஸ் அணியினர் மாரிஸ்ஆன் கெப், ஷிக்கா பாண்டி ஆகியோரின் பந்துவீச்சுக்களில் விக்கெட்களை பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து, 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

கிம் கார்த் (32 ஆ.இ.), ஜோர்ஜியா வெயாஹாம் (22), ஹார்லீன் டியோல் (20) ஆகிய வெளிநாட்டு வீராங்கனைகள் மூவரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களையும், ஷிக்கா பாண்டி 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், ராதா யாதவ் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் மாரிஸ்ஆன் கெப் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுமதியைப் பதிவுசெய்து புதிய மைல்கல் சாதனையை ஏற்படுத்தினார்.

106 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 107 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

ஷஃபாலி வர்மா 28 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 76 ஓட்டங்களைக் குவித்தார். இதனிடையே 19 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் அதிவேக அரைச் சதத்தை பூர்த்திசெய்து ஷஃபாலி வர்மா புதிய சாதனை படைத்தார்.

18ஆவது பந்தில் அவர் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தால், மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து வீராங்கனை சொஃபி டிவைனின் சாதனையை சமப்படுத்தியிருப்பார். ஆனால், 18ஆவது பந்தில் அவரால் ஒரு ஓட்டமே பெறமுடிந்ததால் அந்த சாதனையை அவரால் சமப்படுத்த முடியாமல் போனது.

அவருடன் ஆரம்ப ஜோடியாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி மெக் லெனிங் 15 பந்துகளில் 3 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

இதுவரை நடைபெற்றுள்ள 9 போட்டி முடிவுகளின் அடிப்படையில் மும்பை இண்டியன்ஸ் தனது 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று, 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 6 புள்ளிகளை பெற்று, நிகர ஓட்ட வேக வித்தியாச அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ரு P வொரியர்ஸ் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும், குஜராத் ஜயன்ட்ஸ் 2 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தையும் வகிக்கின்றன. றோயல் செலஞ்சர்ஸ் தனது 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *