
சற்று முன்னர்
பதிவேற்றும் நேரம் பிற்பகல் 05.56
விண்டசர் கோட்டையை வந்தடைந்துள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடலுக்கு தற்போதைய அரசர் மற்றும் அரச குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோட்டையில் செபஸ்டோபோல் கேர்பிஃவ் கோபுரத்தின் மணிகள் தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்களுக்கு ஒலிக்கின்றன.
இதன்போது நிமிடத்திற்கு ஒரு முறை என்ற இடைவெளியின் ஐந்து நிமிடங்களுக்கு துப்பாக்கி வேட்டுக்கள் மீண்டும் தீர்க்கப்பட்டு வருகின்றன.
சற்று முன்னர்
பதிவேற்றும் நேரம் பிற்பகல் 05.02
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் ஹைட்பார்க் வளைவினை சென்றடைந்ததோடு, தற்பொழுது அரச அமரர் ஊர்திக்கு பூதவுடலானது மாற்றப்பட்டது.
இதனையடுத்து, குறித்த ஊர்தியானது விண்ட்சர் கோட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டது.
விண்ட்சர் கோட்டையானது 40 முடியரசர்கள் வாழ்ந்த இடமாகும் என்பதோடு, இரணடாம் உலக யுத்தத்தின் போது லண்டனுக்கு குண்டு வீசப்படும் அபாயம் காணப்பட்ட நேரத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணி குறித்த கோட்டையிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.
அத்துடன் கொரோனா காலத்திலும் இரண்டாம் எலிசபெத் மகாராணி குறித்த கோட்டையிலேயே வசித்து வந்தார்.
இதனால் விண்ட்சர் கோட்டையானது அவருக்கு மிகவும் விருப்பமுடைய இடமாக காணப்பட்டமையினால் பூதவுடல் கோட்டையை நோக்கி எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சற்று முன்னர்
பதிவேற்றும் நேரம் பிற்பகல் 4.50
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கு இடம்பெற்று வருகின்ற நிலையில், தற்போது வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்திலிருந்து ஹைட் பார்க் முனையிலுள்ள வெலிங்கடன் வளைவு வரை பேழையானது சுமந்து செல்லப்படுகின்றது.
வீதியின் இரு பகுதியிலும், இராணுத்தினர் அணிவகுத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தெருக்கள் நகர் வழியாக ஊர்வலம் மெதுவாக சென்றுக்கொண்டிருப்பதோடு, ஒரு நிமிட இடைவெளியில் பிக் பென் மணி ஒலி இசைத்தபடி பூதவுடல் நகர்கின்றது.
ஹைட் பார்க்கில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் வீதிகளில் இரு பகுதிகளிலும் மககள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்று முன்னர்
பதிவேற்றும் நேரம் பிற்பகல் 4.21
இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாவது எலிசபத் கடந்த 8 ஆம் திகதி தமது 96 ஆவது வயதில் காலமானார்.
70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாகவிருந்த இரண்டாம் எலிசபத், மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் காலமானார்.
அவருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்மொரல் மாளிகையில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது.
26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
முந்தைய பதிவு
…………………………………………
மறைந்த பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத் இறுதி ஊர்வலம் இன்று (19) நடைபெறுகிறது.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நேரம் இலங்கை நேரப்படி இன்று காலை 11 மணியுடன் முடிவடைந்தது.
இறுதி ஊர்வலத்தைக் காணவும், இறுதிச் சடங்குகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைக் காணவும் லண்டன் நகரில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
மகாராணியின் உடலை தாங்கிய பேழை பிரித்தானிய நேரப்படி காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு சமய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதற்காக பிரித்தானிய அரசியல்வாதிகள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பெருமளவிலான விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள்.
அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதி ஊர்வலத்துடன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு செல்லவுள்ளனர்.
அரச மரியாதையுடன் நடைபெறும் மகாராணியின் இறுதிச் சடங்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 2,000 பேர் கலந்துகொள்வார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராணியின் உடல் ஊர்வலமாக வின்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வின்ட்சரில் உள்ள மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் ஞாபகார்த்த தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.