மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படகு விபத்தில் ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் பலி!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 வட்டை குளத்தில் தோணியில்  சென்று மீன்பிடிக்க முயன்றபோது தோணி கவிழ்ந்ததில் ஒரு ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியரான யோகராசா கிபேதன், 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

களூவுந்தன்வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கா.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 3 ஆண் மாணவர்களும், 4 பெண் மாணவர்களும் ஆசிரியருமாக 8 பேர்  இன்று காலை தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ளனர்.

 

சுற்றுலா சென்ற இவர்கள் அந்த பகுதியிலுள்ள சிறிய குளமான 40 வட்டை குளத்தில் மீன்பிடிப்பதற்காக அங்கிருந்த தோணியொன்றில் ஆசிரியருடன் 3 மாணவர்களும் சென்ற நிலையில், தோணி குளத்தில் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 4 பேரும் காணாமல் போயிருந்தனர்.

 

இதனையடுத்து காணாமல் போனவர்களை அப்பகுதி மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், ஆசிரியர் உட்பட 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டு, அரசடித்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *