( வாஸ் கூஞ்ஞ) 15.08.2022
மன்னார் மாவட்டத்தில் ஒரு முக்கிய யாத்திரிகர் ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னை பெருவிழா திங்கள் கிழமை (15.08.2022) அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் மேதகு நோபேட் அன்றாடி ஆண்டகை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு அன்ரனி றஞ்சித் ஆண்டகை இவர்களின் கூட்டுத்திருப்பலியுடன் இவ் விழா கொண்டாடப்பட்டது.
கடந்த இரு வருடங்கள் கொரோனா தொற்று நோய் காரணமாகவும் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் இவ் யாத்திரிகள் மருதமடு விழாவுக்கான வருகை அன்று மிக சொற்பமாகவே காணப்பட்டது.
ஆனால் இம்முறை இவ் பெருவிழாவுக்கு சுமார் நான்கு இலட்சம் பேரே வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும் இன்றைய சூழலில் கொரோனா அச்சமும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டபோதும் முன்னைய காலம்போன்று இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் சுமார் ஆறு இலட்சம் பக்தர்கள் இவ் பெருவிழாவில் கலந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு பல நூற்றுக் கணக்கான அருட்பணியாளர்களும் துறவியர்களும் இவ் பெருவிழாவில் கலந்து கொண்டனர்.
இவ் விழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களின் நலன் நோக்கி மன்னார் ஆயர் இல்லமும் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து முன்னெடுக்க்பட்ட அத்தியாவசிய தேவைகள் திறம்பட இடம்பெற்றிருந்தமையும் நோக்கக்கூடியதாக இருந்தது.
அத்துடன் திட்டமிட்ட முறையில் போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்றமையால் அதிகமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள முடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.