மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

மருந்துகளின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளமையினால் மக்கள் அவற்றை தவிர்க்கின்றனர். இதனால் மருத்துவ கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கிடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில்,

வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. நாட்டில் தற்போது கொள்வனவு செய்யப்படுகின்றவற்றில் 40 சதவீதமானவை புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.

இதன் காரணமாக ஏனைய நோய்களுக்கான மருந்துகள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்படுவதில்லை. எனவே இது தொடர்பில் கவனத்தில் கொண்டு மருந்து தட்டுப்பாடுகளுக்கான தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தோம்.

அதற்கமைய இவ்விடயத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் உதவிகள் தொடர்பில் முறையான ஒருங்கிணைப்பினை பேணுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தற்போது மருந்துகளின் விலைகள் 3 மடங்கு வரை உயர்வடைந்துள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். மருந்துகளில் விலைகள் உயர்வடைகின்றமையினால் மக்கள் அவற்றை தவிர்க்கின்றனர். இதனால் சுகாதாரத்துறை வேறு பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

எனவே மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில் கிடைக்கப் பெற்றது. நாட்டில் அந்நிய செலாவணி இருப்பினை அதிகரிப்பதற்காக சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதாகவும் அந்தக்குழுவில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினையும் உள்வாங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இவை தவிர வைத்தியர்களின் பட்டப்படிப்பின் பின்னரான கல்வி நெறி, அதற்கான புதிய ஒழுங்கமைப்புக்கள் உள்ளிட்டவற்றில் கொள்கை ரீதீயான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு வைத்தியசாலை கட்டமைப்புக்களை மேம்படுத்தி, வெளிநாட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கக் கூடிய வகையில் நவீன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *