மருந்து தட்டுப்பாடு இம்மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும் – சுகாதார அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பெரும்பாலும்  இம்மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும். அத்துடன் சத்திர சிகிச்சை உட்பட முன்னுரிமையளிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஷேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளின் போதும் வருடத்தின் முதல் காலாண்டுக்குள் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பில் நான் தெரிவித்திருந்தேன். நாட்டில் 156 மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவியது. அதில் 83 மருந்துகள் நேற்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடனான இத்தகைய சூழ்நிலையிலும் சுகாதாரத்துறைக்கு உச்ச அளவு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சு மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் கடன் திட்டத்தின் ஊடாக மருந்துகளை பெற்றுக் கொண்டாலும் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்திய நாணயத்தில் அவ்வாறு கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அவற்றில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்வருகிறது.

சுகாதாரத் துறையில் காணப்படும் பொது பிரச்சினையானது அவ்வாறு கேள்வி கோரலின் போது மூன்று அல்லது நான்கு மாதங்கள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக செலவாகிறது.

அதனால் நினைத்த உடன் உடனடியாக அவ்வாறு மருந்துகளை பெற்றுக் கொள்வது என்பதும் சுலபமானதல்ல. எவ்வாறெனினும் நான் இந்த பாராளுமன்றத்திலும் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன்.

அதன்படி மருந்துப் பொருட்கள் தொடர்பான இந்த பிரச்சினையை முதற்காலாண்டிற்குள் தீர்த்து வைப்பேன் என தெரிவித்திருந்தேன். அந்த வகையில் இந்த இரண்டு மூன்று வாரங்களில் பெருமளவு மருந்துகள் எமக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன.

சில சத்திரசிகிச்சைகளை காலம் தாழ்த்தி செய்ய முடியும் என நான் ஏற்கனவே குறிப்பிட்ட கருத்துக்கு அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

உண்மையில் சில சத்திர சிகிச்சைகள் இரண்டு மூன்று மாதங்கள் காலம் தாழ்த்தக்கூடியவை என்பதாலேயே நான் அந்த கருத்தை முன் வைத்தேன்.

எனினும் அத்தியாவசியமான எதையும் நாம் காலம் தாழ்த்தியதில்லை. இனியும் அவ்வாறு செய்யப்போவதில்லை. முன்னுரிமையளிக்க வேண்டியவற்றிற்கு நாம் மிக அதிகமாக கவனம் செலுத்துவோம். அது தொடர்பில் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் மிக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

சிலர் மட்டுமே விமர்சனங்களில் ஈடுபட்டனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதேவேளை,காலத்திற்கு ஏற்ப எம்மால் சில கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது அதனால் சில நிறுவனங்களில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முறைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

அதனை புரிந்து கொள்ளாதவர்கள் தினமும் திட்டமிட்ட சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதை குறிப்பிட வேண்டும்.

அதேவேளை, தேர்தலை மருத்துவத்துறை செயற்பாடுகளுக்கான தடையாக சிந்திக்க வேண்டிய அவசியமுமில்லை. கடந்த காலங்களைப் பார்க்கும் போது நாட்டில் இயல்பு நிலை காணப்பட்ட காலத்திலும் கூட சுகாதாரத் துறையில் அனைத்தும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படவில்லை. சில சில குறைபாடுகள் தொடர்ந்து வந்துள்ளன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும் அண்மைக் காலங்களில் அந்த நிலை சற்று உக்கிரமடைந்தது. அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அந்த வகையில் அதனை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் முறையாக முன்னெடுத்து வருகின்றோம். அதன் பிரதி பலன்களை இம்மாதத்தில் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

AIIB மூலம் எமக்கு 100 மில்லியன் கிடைத்தது என பலரும் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் அந்த நிதி  செப்டம்பர் மாதத்திலேயே எமக்கு கிடைக்கும்.

அதில் 20 மில்லியனை கடனை மீள செலுத்துவதற்காக செலவிட வுள்ளோம். ஏனைய 80 மில்லியன்களுக்கும்  மருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதைவிட இந்தத் துறைக்காக எம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் நாம் செய்வோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *