மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண 100 மில்லியன் டொலர் – அரசாங்கம்

நாட்டிலுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஏனைய விடயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு நிலைமை நெருக்கடியாகக் காணப்படுகின்ற போதிலும், மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வேறு விடயங்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சிற்கு மருந்து கொள்வனவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட பல தரப்பினர் மருந்து கொள்வனவிற்காக தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றன. அதே போன்று நன்கொடையாகவும் பல மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சம்பிரதாய மறுசீரமைப்புக்களிலிருந்து விலகி , அவசர கொள்வனவிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டு நிலைமை நெருக்கடியாகக் காணப்படுகின்ற போதிலும், மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார்.

இது தொடர்பில் இவ்வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டத்தின் மூலம் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டத்தின் மூலம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ  உபகரணங்களைக் கொள்வனவுக்குப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *