மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள், அரச சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டமையினாலேயே இலங்கை தோல்வியடைந்த நாடாக காணப்படுகிறது – சந்திரிகா

(எம்.மனோசித்ரா)

 

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆரம்பித்த ஊழல் , மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையிடப்பட்டமையின் காரணமாகவே இன்று இலங்கை தோல்வியடைந்த நாடாக காணப்படுகிறது.

இந்த நிலைமையை மாற்றுவது கடினம் என்ற போதிலும் , எம்மால் அதனை செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் மாநாடு வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நான் நீண்ட காலமாக அரசியலிலிருந்து விலகியிருந்தேன். கொள்ளையர்களுடன் அரசியலில் ஈடுபட முடியாது என்பதால் 2005ஆம் ஆண்டிலிருந்தே நான் விலகியிருந்தேன். 2015இல் எனது மீள் வருகையுடன் அனைவரும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். எவரும் எதிர்பாராத பல மாற்றங்கள் இடம்பெற்றன.

எனினும் அதன் பின்னர் 4 ஆண்டுகள் நான் அரசியலிலிருந்து விலகியிருந்தேன். தற்போது என்னை மீண்டும் களத்திற்கு அழைத்திருக்கின்றனர். ஆனால் இம்முறை மாற்றமொன்று இடம்பெறுமா என்பது எனக்குத் தெரியாது. எவ்வாறிருப்பினும் நான் சற்று ஒதுங்கியிருந்து சில நடவகடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

இலங்கை தோல்வியடைந்த ஒரு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கொள்ளையர்களாகின்றனர். இது எவ்வாறு இடம்பெறுகிறது? இதனை எவ்வாறு நிறுத்துவது? 1977களில் அரச சேவைகளிலில் காணப்பட்டவர்களில் 10 சதவீதமானவர்கள் கூட கொள்ளையர்களாகக் காணப்படவில்லை.

எனினும் 1977இன் பின்னர் படிப்படியாக அனைவரும் கொள்ளையர்களாக்கப்பட்டுள்ளனர். அதன் உச்சகட்டம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலேயே இடம்பெற்றது. அவரது ஆட்சி காலத்தில் , முடிந்தவரை கொள்ளையிடுங்கள். ஆனால் அவை வெளிவரமால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அனைவரும் கொள்கை ரீதியில் கொள்ளையர்களாக்கப்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு , இரண்டாவது அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அவரது ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் , பிரதேசசபை உறுப்பினர்கள் என அனைவரும் போட்டியிட்டு கொள்ளையடித்தனர். இதனை தற்போது சீர்செய்வது கடினமாகும். எனினும் எம்மால் அதனை செய்ய முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *