(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மாதிவெல மற்றும் கிம்புலாவல பிரதேசங்களில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை அங்கிருந்து அகற்றப் போவதில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (பெப் 21) தெருவோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுவது தொடர்பில் இடம் பெற்ற சர்ச்சைக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தெருவோர உணவுக் கடைகள் முறை வெற்றிகரமான வேலைத்திட்டமாகும். எவரும் தடுக்காத வகையில் அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும்.
கிம்புலாவல பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகள் ஏற்கனவே வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டன. இப்போது அது தினமும் நடைபெறுகிறது.
இந்த வீதியோரக் கடைகளில் வர்த்தகம் செய்ய முடியவில்லை என முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அழுக்குகள் குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன. நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் அது தொடர்பான கலந்துரையாடலை நடத்தினோம். அவர்களுக்கான முறையான அமைப்பை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது போல். இந்தக் கடைகளை அகற்ற நாம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தபோது சுற்றுலாத்துறையைச் சேர்ந்த பலர் சொகுசு வாகனங்களில் இங்கு வந்து தொழில் செய்யத் தொடங்கினர்.
அது நல்ல விடயம்தான். உலகில் எல்லா நாடுகளிலும் வீதியோர உணவு வர்த்தகம் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. அவர்களிடம் முறையான முறைகள் உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முடிவடைகின்றன.
அந்த இடங்களை சுத்தம் செய்ய ஒரு முறை உள்ளது. அந்த முறையை பின்பற்றினால் இதை நீக்க மாட்டோம். இது ஒரு வெற்றிகரமான திட்டம். ஒரு முறையான அமைப்பை உருவாக்கி அதனை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளோம் என்றார்.