
மத்திய மாலியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் பஸ்ஸொன்றில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 53 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோப்டி பகுதியில் உள்ள பண்டியாகரா மற்றும் கவுண்டகா இடையேயான வீதியில் வியாழக்கிழமை பிற்பகல் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜிகாதிகளின் வன்முறையின் மையமாக அறியப்படும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குண்டுவெடிப்பில் பலியானவர்கள் அனைவரும் பொதுமக்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அறிக்கையில், 2022 ஆகஸ்ட் 31 நிலவரப்படி கண்ணிவெடிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களால் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும் கண்ணிவெடிகளால் 103 பேர் உயிரிழந்துள்ளதுடன் 297 பேர் காயமடைந்துள்ளனர்.