(நெவில் அன்தனி)
இலங்கை மாஸ்டர்ஸ் கூடைபந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் கஜ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பூரண அனுசரணையடன் நடைபெறுவதுமான 8ஆவது மாஸ்டர்ஸ் கூடைபந்தாட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் நுகேகொடை கூடைப்பந்தாட்ட கழக அணியும் பென்குயின்ஸ் அணியும் 3 வயது பிரிவுளில் இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
30 வயதுக்கு மேற்பட்ட, 35 வயதுக்கு மேற்பட்ட, 40 வயதுக்கு மேற்பட்ட ஆகிய 3 வயது பிரிவுகளில் இந்த இரண்டு கழகங்களினதும் தலா 3 அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.
இதேவேளை, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஏஞ்சல்ஸ் அணியும் ஓல்ட் விக்டோரியன் அணியும் மோதவுள்ளன.
45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் 76ers அணியும் நெட்ஸ் பின்க் அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
55 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ஓல்ட் பென்ஸ் அணியும் புல்ஸ் அணியும் விளையாடவுள்ளன.
இது இவ்வாறிருக்கு, 30 வயதுக்கு மேற்பட்ட, 35 வயதுக்கு மேற்பட்ட, 40 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதுக்கு மேற்பட்ட ஆகிய வயது பிரிவுகளுக்கான அரை இறுதிப் போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவருகின்றன.
சகல பிரிவுகளுக்குமான இறுதிப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளன.
சம்பியனாகும் அணிகளுக்கும் 2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கும் கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.