பல்வேறு காரணங்களால் கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும் மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி, அடுத்த பெரும் போகத்திற்கு முன்னர் அதன் பயனை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (19) பிற்பகல் மினிப்பே இடதுகரை கால்வாய் நிர்மாணப் பணியை பார்வையிட்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

குறித்த பணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி, திட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும் பொறியியலாளர்களிடம் கேட்டறிந்தார்.அங்கு கள முகாமையாளர் கசுன் குணவர்தன இத்திட்டம் குறித்து விளக்கமளித்தார்.

இத்திட்டத்தின் எதிர்காலப் பணிகளுக்கு இலங்கையிலுள்ள பொறியியல் பீட மாணவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மின்சாரத் தேவையின் உச்ச நிலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரன்தம்பே நீர்மின் நிலையத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் சந்தர்ப்பங்களில், இடது மற்றும் வலதுகரை கால்வாய்களுக்கு நீரை வழங்குவதற்கு தற்போதுள்ள மதகுகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக மினிப்பே விவசாய நிலங்களுக்கு அதிக நம்பகத்தன்மையுடனும், தொடர்ச்சியாகவும் நீர் வழங்குவதற்காக மினிப்பே அணையை 3.5 மீட்டர் உயர்த்துதல் மற்றும்  74 கிலோமீட்டர் நீளமுள்ள மினிப்பே இடதுகரையின்  பிரதான கால்வாயை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

மினிப்பே அணைக்கட்டு புனரமைக்கப்பட்டதன் பின்னர், விவசாயிகளுக்கு தொடர்ந்து  நீரைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு ஏற்படுவதுடன், மினிப்பே இடது கரையின் இருபுறங்களிலும் உள்ள பயிர்ச்செய்கை நிலங்கள் சிறு மற்றும் பெரு போகங்கள் இரண்டிலும்   தடையின்றி விவசாயம் செய்ய முடியும். இதன் மூலம் 15,000 விவசாய குடும்பங்கள் பயனடைகின்றன.

இத்திட்டத்திற்கான செலவு 3,000 மில்லியன் ரூபாவாகும் மற்றும் சீனா Gexhouba Group Company Limited (CGGC) நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

1948 இல் கட்டப்பட்ட மினிப்பே கால்வாய், கடைசியாக 1980 இல் புதுப்பிக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புனரமைப்புப் பணி நடப்பது  விசேட அம்சமாகும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் மினிப்பே இடது கரை கால்வாய் புனரமைப்புத் திட்ட முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் டி.பி. விஜேரத்ன, திட்டப் பணிப்பாளர் இந்திக்க வலிசுந்தர உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *