அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மினி மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தைச் (வட மாகாணம்) சேர்ந்த சுமன் கீரன்  0.53 செக்கன் வித்தியாசத்தில்  தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

கம்பஹாவில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற 21.0975 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஆண்களுக்கான மினி மரதன் ஓட்டப் போட்டியை ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்கள் 38 செக்கன்களில் ஓடி முடித்த மேல் மாகாணம் மொரட்டுவை மகா வித்தியாலய மாணவன் சதீப்ப அனுசன்க தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அவருக்கு சவாலாக விளங்கிய முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் கீரன் (1:16:31) போட்டியின் கடைசிக் கட்டத்தில் வெற்றிபெறுவதற்கு கடுமையாக முயற்சித்த போதிலும் அவர் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது.

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா  மினி மரதன்   வரலாற்றில் கிளிநொச்சி மாணவன் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.

மேல் மாகாணம் கம்பஹா மிரிஸ்வத்த தேசிய பாடசாலை மாணவன் தில்ஹார லக்ஷான் (1:17:00) வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான மினி மரதன் ஓட்டப் போட்டியில் மேல் மாகாணம் பான்திய மகா வித்தியாலய மாணவி பேஷலிகா மதுவன்தி (1:34:52) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

மேல் மாகாணம் கொழும்பு அமலமரி மகளிர் வித்தியாலய மாணவி ஓஷாதினி நிலுமிகா (1:35:08) வெள்ளிப் பதக்கத்தையும் ஊவா மாகாணம்   செனாபதி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சமிலா சிறிவர்தன (1:37:01) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

பெண்கள் பிரிவில் போட்டியிட்ட வட மாகாணம், இளவாழை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை மாணவி எல். மேரி வினுஷா (1:45.32) 5ஆம் இடத்தையும் ஊவா மாகாணம், பண்டாரவளை தமிழ் வித்தியாலய மாணவி தியாகராஜ் மோனப்பிரியா (1:49.03) 7ஆம் இடத்தையும் பெற்றனர்.

கல்வி அமைச்சும் கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை திணைக்களமும் இணைந்து நடத்திய மினி மரதன் ஓட்டப் போட்டிக்கு நெஸ்லே நெஸ்டோமோல்ட் பூரண அனுசரணை வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *