மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் காஞ்சன

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர மாற்றுத் திட்டம் ஏதும் தற்போது கிடையாது.

24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்றால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் .

தேர்தல் இடம்பெறவுள்ள  நிலையில்  மின் மற்றும் எரிபொருள் கட்டணத்தை அதிகரித்தால் அது ஆளும் தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிவோம்.

அரசியல் நோக்கத்திற்காக எம்மால் பொய்யாக செயற்பட முடியாது என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் தற்போதைய நிலை அதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் ஜனாதிபதியின் அக்கிராசன உரை தெளிவுபடுத்தியுள்ளது.

நெருக்கடியில் இருந்து மீள்தற்கான ஒரே வழி காணப்படுகின்றது அந்த வகையில் எத்தகைய அரசியல் நோக்கங்கள் இருந்தாலும் அந்த வழி தொடர்பில் சிறந்த தெளிவினை நாட்டு மக்களும் பாராளுமன்றத்தில் அனைவரும் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரையை எதிர்க்கட்சியினர் பகிஷ்கரித்தனர். சிறந்த கல்விமான்களான பேராசிரியர்கள் கூட அதனை பகிஷ்கரித்தமை வியப்புக்குரியது.

உண்மையில் நாடு தேர்தல் ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையிலேயே ஜனாதிபதி இத்தகைய உரையொன்றை ஆற்றியுள்ளார்.

அது அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதிக்கும். எனினும் மாற்று வழி இல்லாத நிலையிலேயே தேர்ந்தெடுத்துள்ள வழி தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பது,வரி அதிகரிப்பு,மின்சார கட்டணம் அதிகரிப்பு,எரிபொருள் அதிகரிப்பு என்பது தொடர்பில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

ஒரு போதும் அரசாங்கம் அதனை விரும்பவில்லை எனினும் நாட்டில் தொடரும் பற்றாக்குறையை ஓரளவேணும் நிவர்த்தி செய்வதற்கு  அதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது.

அதனையே தமது உரை மூலம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்த வகையில் அனைவரும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.

மின் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாதது. அதே போன்று கல்விப் பொது தராத உயர்தர பரீட்சை காலத்தில் மின் துண்டிப்பைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் சில மாதங்களுக்கு முன்பே நாம் அது தொடர்பில் விளக்கமளித்திருந்தோம் அவ்வாறு செய்வதானால் அந்த நட்டம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.எனினும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அதேபோன்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையில் மாடி வீட்டுக்குக் குடியிருப்புகளுக்கு விசேட மின்கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏன் அவ்வாறு வழங்கப்படுகிறது என தெரியாது அந்த மின் கட்டண சலுகை மீளப் பெறப்பட்டால் சாதாரண வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான தமது நிலைப்பாட்டை எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிப்பதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.உயர்தர பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்துண்டிப்பு அமுல்படுத்துவதையிட்டு வருத்தமடைகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *