மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்காவிட்டால் பாரிய நெருக்கடி தோற்றம் பெறும் ; இலங்கை மின்சார சபை

(செய்திப்பிரிவு)

மின்சார சபை கோரியுள்ள 60 சதவீத மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் பாரிய நெருக்கடி நிலை தோற்றம் பெறுவதுடன், மின்னுற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தேசிய பேரவை கூட்டத்தில் வலியுறுத்தினர்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மின்சார சபை மற்றும் ஆணைக்குழு என்பன கூடிக் கலந்துரையாடுமாறு தேசிய பேரவை திங்கட்கிழமை (13) உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர்  தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் தேசிய பேரவை  நேற்று திங்கட்கிழமை கூடிய போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மின்சார சபை 60 சதவீத கட்டண அதிகரிப்பு கோரியுள்ள பின்னணியில் தேவையான அளவு அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை எனின் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சார சபையின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்குக் கூட நிதி இல்லாமல் போவதால் நீண்ட நேர மின் துண்டிப்புக்குச்செல்லவேண்டிய நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

மின்சார சபையின் தரவுகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்கள் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த சந்தர்ப்பத்தில் மின்சார சபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றின் கருத்துக்களை கலந்துரையாடி ஒரு கருத்துக்கு வந்து தீர்மானம் எடுப்பது மிக முக்கியமானது என்றும் அவ்வாறில்லை எனின் பொதுமக்கள் கஷ்டத்துக்கு உட்படுவதை தவிர்க்க முடியாமல் போகும் என சுட்டிக்காட்டிய தேசிய பேரவை இது தொடர்பில் விரைவாகக் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதன் தேவையை வலியுறுத்தியது.

அதேபோன்று, குறுகிய,மத்திய மற்றும் நீண்டகால தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கும்போது முன்னுரிமைகளை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தேசிய கொள்கை குழு தொடர்பில் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேசிய பேரவைக்கு விளக்கமளித்தார்.

இதுதொடர்பில் எண்ணக்கருப் பத்திரத்தை தயாரித்து முடித்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார். அதற்கமைய தேசிய பேரவையூடாக தேவையான எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *