(வாஸ் கூஞ்ஞ) 07.10.2022
தற்பொழுது மீன்பிடி கலங்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு ஒன்றை கடற்தொழில் தலைமை காரியாலயம் ஏற்பாடு செய்துள்ளதாக உதவி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க மன்னார் மீனவர்களுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த 04.10.2022 இல் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மன்னார் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் வெளிக்கள அலுவலர்களுக்கான கூட்டம் ஒன்று உதவிப் பணிப்பாளர் திரு. சரத் சந்திரநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மாவட்டத்தின் கடல்சார் உதவி பொறியியலாளர் திரு.வி.சிறீதரன் உட்பட மாவட்டத்தின் 06 கடற்றொழில் பிரிவுகளுக்கு பொறுப்பான கடற்றொழில் பரிசோதர்களும் கலந்து கொண்டனர்.
இதில் முக்கியமாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மீனவர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ளத் தேவையான கண்ணாடியைப் படகுகளின் விலைகள் பாரதூரமாக அதிகரித்துள்ளதால் அதனைக் கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
சாதரணமாக ரூபாய் ஒன்றரை தொடக்கம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனையான படகுகள் தற்போது ஆறு தொடக்கம் ஏழு லட்சத்துக்கு விலை உயர்ந்துள்ளன.
எனவே இவ் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு ஒன்றை தலைமை காரியாலயம் ஏற்பாடு ஒன்றை செய்துள்ளதாக உதவி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி இவ்வளவு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய படகுகளின் பதிவு நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதhகவும் இதன்மூலம் வசதியற்ற மீனவர்கள் நல்ல நிலையில் உள்ள படகுகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்து தங்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள ஏராளமான பதியப்படாத படகுகளை பதியப்பட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இதற்காக மீனவர்கள் தங்கள் படகுகள் கடலோட தகுதியானது என உறுதிப்படுத்த கடல்சார் உதவி பொறியியலாளரின் கடற்பகுதி சான்றிதழை பெற்று கடற்றொழில் பரிசோதகரிடம் சமர்ப்பித்து தங்கள் படகுகளை பதிவு செய்து கொள்ளலாம் என உதவி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் மாவட்டத்தின் இறங்குதுறையில் தொழிலுக்கு இடையூறாக கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் படகுகள் பல படகுகளை பிரயோசனப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதனையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.