முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் பெற்றோலின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் , முதலாவது கிலோ மீற்றருக்கு அறிவிடப்படும் 100 ரூபா கட்டணத்தைக் குறைக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

முச்சக்கரவண்டிகளுக்காக இதுவரை வழங்கப்பட்ட பெற்றோலின் அளவை 5 லீற்றரிலிருந்து 10 லீற்றர் வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அனுமதி வழங்கியிருந்தார்.

அதற்கமைய நவம்பர் 6 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் , இதற்கான பதிவுகள் நவம்பர் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர மேலும் தெரிவிக்கையில் ,

சில முச்சக்கரவண்டி சாரதிகள் முதலாவது கிலோ மீற்றருக்கு 150 ரூபா அல்லது 120 ரூபா அறவிடுகின்றனர். எனினும் முதலாவது கிலோ மீற்றருக்கு 100 ரூபாவையும் , அடுத்த ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 90 ரூபாவையும் அறவிடுமாறு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அறிவித்தது.

அதற்கமைய தற்போது முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் பெற்றோலின் அளவு அதிகரிக்கப்பட்டு;ள்ள போதிலும் , எம்மால் முதலாவது கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் 100 ரூபா கட்டணத்தை குறைக்க முடியாது. ஆனால் 120 மற்றும் 150 ரூபாவை முதலாவது கிலோ மீற்றருக்காக அறவிடுபவர்கள் அதனைக் குறைக்க வேண்டும்.

வாராந்தம் வழங்கப்படும் பெற்றோலின் அளவை குறைந்தபட்சம் 20 லீற்றர் வரை அதிகரித்தால் முதலாவது கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் 100 ரூபா கட்டணம் நிச்சயம் குறைக்கப்படும். அவ்வாறன்றி தற்போது வழங்கப்படும் பெற்றோலின் அளவுக்கு கட்டணத்தைக் குறைக்க முடியாது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *