மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகுவதற்கு அக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தன்னை நிர்ப்பநதிப்பதாக பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அக்கழகத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் மீது தனக்கு மதிப்பு எதுவும் இல்லை எனவும் ரொனால்டோ கூறியுள்ளார்.

பிரிட்டனின் டோக் ரீவி அலைவரிசையில், பியர்ஸ் மோர்கன் அன்சென்ஸர்ட் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (13) அளித்த செவ்வியொன்றிலேயே ரொனால்டோ இப்பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ 5 தடவைகள் பெலன் டி’ஓர் விருது வென்றவர். போர்த்துகல் தேசிய அணியின் தலைவராகவும் விளங்குகிறார்.

ஸ்பெய்னின் ரியல் மட்றிட் கழகத்தில் 2009 முல் 2018 ஆம் ஆண்டு வரை விளையாடி வந்த ரொனால்டோ, 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜவென்டஸ் கழகத்தில் இணைந்தார். கடந்த வருடம் அவர் தனது முந்தைய கழகமான இங்கிலாந்தின் மென்செஸ்டர்  யுனைடெட்டில் மீண்டும் இணைந்தார்.

கிறிஸ்டியானா ரொனால்டோ 

அக்கழகத்தின் புதிய முகாமையாளராக நெதர்லாந்தின் எரிக் டென் ஹக் கடந்த மே மாதம் பதவியேற்ற பின்னர், அவருக்கும் ரொனால்டோவுக்கும் உறவு சுமுகமாக இல்லை.

கடந்த மாதம் டொட்டென்ஹாம் கழகத்துக்கு எதிரான போட்டியில் மாற்றுவீரராக களமிறங்குவதற்கு ரொனாடோ மறுத்தார். இதனால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  பின்னர் அண்மைக்காலங்களில் மீண்டும் அவர் போட்டியில் பங்குபற்றியதுடன், அஸ்டன் வில்லா கழகத்துடனான போட்டியில் அணித்தலைவரகாவும் செயற்பட்டார்.

எனினும் உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புல்ஹாம் கழகத்துடனான மென்செஸ்;டர் கழக போட்டியில் ரொனால்டோ பங்குபற்றவில்லை.

எரிக் டென் ஹக்

இந்நிலையில் நேற்று முன்தினம் அளித்த செவ்வியில், மென்செஸ்டர் யுனைடெட் முகாமையாளர் எரிக் டென் ஹக் குறித்து ரொனால்டோ கூறுகையில், ‘அவருக்கு நான் மதிப்பளிப்பதில்லை, ஏனெனில் எனக்கு அவர் மதிப்பளிப்பதில்லை. பயிற்றுநர் மாத்திரமல்ல, மேலும் 2 அல்லது 3 நபர்களும் தான். துரோகமிழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன்’ என்றார்.

கழகத்திழலிருந்து ரொனால்டோவை வெளியேற்றுவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா என கேட்கப்பட்டபோது, ‘ஆம். துரோகமிழைக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் இங்கு இருப்பதை சிலர் விரும்பவில்லை. இந்த வருடத்தில் மட்டுமல்ல, கடந்த வருடத்திலும் அப்படித்தான்’ என ரொனால்டோ பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *