யாழ். நெடுந்தீவுக்கான படகு சேவையில் பயணிப்போரை விலங்குகள் போல் கடற்படையினர் நடத்துவதாக பயணிகள் கவலை

யாழ். நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வட தாரகை படகில் முன்னுரிமைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஏற்றிவிட்டு, அதன் பின்னரே ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பயணிகள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு தாமதமாகி படகில் அனுமதிக்கப்படுவதால் அரச உத்தியோகத்தர்கள் பொதுத் தேவைகளுக்கு செல்வோர் என பலரும் தங்கள் அன்றாட செயற்பாடுகளை உரிய ‍நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் நெடுந்தீவுக்கான பயணிகளை கடற்படையினர் விலங்குகளை போல் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வட தாரகை மற்றும் குமுதினி ஆகிய படகுகள் இலவச போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன் பிரதேச சபைக்கு நெடுந்தாரகை மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகுகளும் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளன.

இலவச போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு  சொந்தமான குமுதினி படகு கடந்த ஆறு  மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் திருத்தப் பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனையடுத்து, வடதாரகை படகு மாத்திரமே இலவச பயணிகள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருவதுடன், தினமும் காலை 7 மணி மற்றும் 2.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து குறிக்காட்டுவானுக்கும், காலை 8.30 மற்றும் 4 மணிக்கு குறிக்காட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கும் சேவையில் ஈடுபடுவதுடன் சுமார் 100 பயணிகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றிச் செல்ல கடற்படையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் நெடுந்தீவிலிருந்தும் குறிக்காட்டுவானிலிருந்தும் தினமும் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு தேவைகள் கருதி பயணித்து வருகின்றனர்.

அத்துடன் நெடுந்தீவு பிரதேச செயலகம் பிரதேச சபை ஆகியவற்றில் பணியாற்றும் 70 வீதமான உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு நோக்கி பயணிக்கும் பயணிகளை விலங்குகள் போல் கடற்படையினர் அடைத்து வைத்துவிட்டு, முதலில் சுற்றுலாப் பயணிகளை வடதாரகை படகில் ஏற்றுகின்றனர்.

எஞ்சிய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன் ஏனைய பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு பல்வேறு தேவைகளை கருதி பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் பயணிகள் குறிக்காட்டுவானிலும் நெடுந்தீவிலும் தடுத்து நிறுத்தப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *