யேமன் யுத்தத்தினால் 11,000 சிறார்கள் பலி அல்லது அங்கங்களை இழந்துள்ளனர்: ஐ.நா தெரிவிப்பு

யேமனின் சிவில் யுத்தம் 8 வருடங்களுக்கு முன்னர் தீவிரமடைந்ததிலிருந்து, 11,000 இற்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது உடல் அங்கங்களை  இழந்துள்ளனர் என ஐ.நா இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

உண்மையான எண்ணிக்கைகள் மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும், ஐ.நாவின் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான சிறாரக்ள் உயிர்களை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மேலும் பலர் தடுக்கப்படக்கூடிய நோய்கள் மற்றும் பட்டினியினால் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என யுனிசெப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கெத்தரின் ரசல் தெரிவித்துள்ளார்.

யேமனிலுள்ள 22 லட்சம் சிறார்கள் கடுமையான போஷாக்கு குறைப்பாட்டுடன் உள்ளனர், அவர்களில் கால் பங்கினர் 5 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

யேமனில் 2014 ஆம் ஆண்டு சிவில் யுத்தம் உக்கிரமடைந்தது, ஈரான் ஆதரவுகொண்ட ஹெளதீ கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை விரைவாக கைப்பற்றினர். அதையடுத்து, சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் யேமன் அரசாங்கத்துக்கு ஆதரவாக போரில் இறங்கின.

இந்த யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள், பாதுகாப்பற்ற குடிநீர், நோய்ப்பரவல் மற்றும் பட்டினி முதலானவற்றினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

2015 மார்ச் மாதத்துக்கு 2022 செப்டெம்பர் மாதத்துக்கும் இடையில் 3774 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

போரிடுவதற்காக 3904 சிறுவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும், 90 இற்கும் அதிகமான சிறுமிகளுக்கு, சோதனைச்சாவடியில் பணியாற்றுதல் உட்பட பல பணிகள் வழங்கப்பட்டதாகவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *