ரணில் அரசாங்கத்திற்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியானது! பெருகும் அந்நிய செலாவணி

இலங்கைக்கு மீ்ண்டும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.

இதனால் இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17000ஐத் தாண்டியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாகக் குறைந்தது.

ஆனால் நாடு மீண்டும் நிலைபெறத் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இந்தியா, கனடா போன்ற நாடுகளில் இருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

மே மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 650 பேராக மட்டுப்படுத்தப்பட்டு தற்போது 1600 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக சுற்றுலாத்துறை கடுமையான பாதிப்பை சந்தித்திருந்ததது.

எரிபொருள் நெருக்கடி நிலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பொதுமக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினாலும் சுற்றுலாத்துறை பலத்த அடி வாங்கியது. பல நாடுகள் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக தங்களது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தின. போராட்டங்கள், அரசியல் மாற்றங்களின் விளைவால் எதிர்பாராத விதமாக ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் அவர் மீது பல்வேறு எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. குறிப்பாக நாட்டிற்கு தேவையான அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொள்வதிலும், நாட்டிற்கு டொலர்களைப் பெற்றுக் கொடுப்பதிலும் ரணில் முன்னின்று செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவை அனைத்தையும் சரிசெய்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய மாபெரும் பொறுப்பு ரணில் தலைமீது சுமத்தப்பட்டது.நிலைமை மேலும், மோசமடைந்தால் பொதுமக்கள் மேலும் கொதித்தெழலாம், ஆட்சி மீண்டும் கவிழ்க்கப்படலாம் என்ற சூழலில் இந்த பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காண வேண்டிய நிலையில் ரணில் தள்ளப்பட்டார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தற்போது நாட்டிற்கு வருகைத் தரும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளின் காரணமாக மீண்டும் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், நாட்டின் நிலைமை சீரடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதனால் நாட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *