ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம் எதிர்பார்க்கவில்லை – ஓமல்பே சோபித தேரர்

(எம்.மனோசித்ரா)

ஜனநாயக ரீதியில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான உரிமையை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும். பசியால் அழும் குழந்தையை அடித்து அதன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது.

அதே போன்று நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆர்ப்பாட்டங்களை இராணுவத்தினரின் துப்பாக்கிகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியாது. ரணில் விக்கிரமசிங்க என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம் எதிர்பார்க்கவில்லை என்று ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அரசியல்வாதிகளே அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று கோருகின்றனரே தவிர , அங்கு வாழும் சாதாரண மக்கள் அல்ல. வாழ்வதற்கான உரிமையையே அம்மக்கள் கோருகின்றனர் என்றும் ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவின் கலந்துரையாடல் சனிக்கிழமை (நவ. 26) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அதிகாரத்தைப் பகிர்தல் தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை. அரசியல்வாதிகள் சிலருக்கே அதிகாரத்தைப் பகிர வேண்டியேற்பட்டுள்ளது. அதிகாரத்தை அல்ல: சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். நாட்டிலுள்ள சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படாமையின் பிரச்சினையே தற்போது காணப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள சாதாரண மக்களின் தேவை அதிகாரம் அல்ல. வாழ்வதற்கான உரிமையாகும். தெற்கிலும் இதே நிலைமையே காணப்படுகிறது.

நாட்டின் சொத்துக்களில் ஊழல் மோசடிகள் செய்யாமல் , அவற்றை அனைத்து இன மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இது தொடர்பில் அரசியல்வாதிகளின் பார்வை , எமது தூர நோக்கினை விட வேறுபட்டதாகும்.

69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்தாக அவர் எண்ணிக் கொண்டிருக்கின்றார். உலகலளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே அவருக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. ஜனநாயகத்தையும் மக்களின் நிலைப்பாட்டையும் மறந்து செயற்பட வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜனநாயக ரீதியில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு மக்களுக்கு ஜனாதிபதி இடமளிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க என்ற சரித்திரத்தினுள் ஹிட்லர் ஒருவரை நாம் எதிர்பார்க்கவில்லை.

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி கூறினாலும் , மக்கள் அவர்களுக்கு தோன்றும் சந்தர்ப்பத்தில் தோன்றுவதை செய்வார்கள்.

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். எனினும் அவற்றை இராணுவத்தினரைக் கொண்டு நிறுத்த முடியாது.

மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கி , அதன் மூலம் ஆர்ப்பாட்டங்களை நிறுத்த வேண்டும். பசியால் குழந்தையொன்று அழும் போது , அக்குழந்தையை அடித்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது.

அதே போன்று நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினரின் துப்பாக்கிகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *