
பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, இந்தியாவில் இருந்து நுகர்வோர் பொருட்களை அதிகளவில் நம்பியிருப்பதால், ரஷ்யாவிற்கான ஏற்றுமதிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் மாதத்தில், இந்தியா 280 மில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 3.7 சதவீதம் அதிகமாகும்.
காய்கறிகள், தேநீர், கோபி, இரசாயனங்கள் மற்றும் இரும்பு போன்ற பொருட்களே கூடுதல் ஏற்றுமதியாகின்றன. இதேபோல், செப்டம்பரில், வளர்ச்சி கிட்டத்தட்ட 6 சதவீதமாக காணப்பட்டது. இந்தியா ரஷ்யாவிற்கு 297.61 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது.
பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உக்ரைனை ஆக்கிரமித்தவுடன் ரஷ்யாவிற்கான ஏற்றுமதிகள் தடுமாறத் தொடங்கின. மேலும், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை உலகளாவிய வர்த்தகத்திலிருந்து தனிமைப்படுத்த பொருளாதாரத் தடைகளை விதித்தன.
ஆனால் தற்போது நிலைமை சரியாகி 2023 ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் பணிப்பாளர் அஜய் சஹாய் குறிப்பிட்டுள்ளார்.