
இந்தியாவுக்கு எதிராக இந்தூர் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (04) இரவு நடைபெற்ற 3ஆவதும் இறுதியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 49 ஓட்டங்களால் தென் ஆபிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.
ஏற்கனவே தொடரை பறிகொடுத்திருந்த தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு ரைலி ருசோவ் குவித்த கன்னிச் சதம் வித்திட்டது. அத்துடன் அதன் துல்லியமான பந்துவீச்சு, திறமையான களத்தடுப்பு என்பன போனஸாக அமைந்தது.
எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் தொடரை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா தனதாக்கிக்கொண்டது.
2ஆவது போட்டியுடன் தொடரை உறுதி செய்து கொண்ட இந்தியா இந்தப் போட்டியில் கே. எல். ராகுல், விராத் கோஹ்லி ஆகியோருக்கு ஓய்வு கொடுத்தது.
தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 228 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதல் இரண்டு போட்டிகளிலும் திறமையாக துடுப்பெடுத்தாடிய இந்தியா, இப் போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
முதலாவது ஓவரின் 2ஆவது பந்தில் ரோஹித் ஷர்மா (0) ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் (1) வெளியேறினார்.
ரிஷாப் பன்ட் (17), துடுப்பாட்ட வரிசையில் தரம் உயர்த்தப்பட்ட தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 ஒட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பன்ட் களம் விட்டகன்றார். (45 – 2 விக்.)
மேலும் 30 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்த போது தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளை விளாசி 46 ஓட்டங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிய 13ஆவது ஓவரில் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தீப்பக் சஹார், உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தப் போட்டியில் இந்தியாவின் அதிசிறந்த இணைப்பாட்டத்தைப் பதிவு செய்தனர்.
தீப்பக் சஹார் 17 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 31 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய உமேஷ் யாதவும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தனிநபருக்கான அதிகூடிய 20 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கேஷவ் மஹாராஜ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வெய்ன் பார்னல் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தத் தொடரில் 3ஆவது தடவையான அணித் தலைவர் டெம்பாக பவுமா துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார். அவர் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 5ஆவது ஓவரில் 30 ஓட்டங்களாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த குவின்டன் டி கொக், ரைலி ருசோவ் ஆகிய இருவரும் அதிரடியில் இறங்கி 48 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பகிரந்து அணியைப் பலப்படுத்தினர்.
குவின்டன் டி கொக் 43 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைக் குவித்தார்.
தொடர்ந்து ரைலி ருசோவ், ட்ரிஷான் ஸ்டப்ஸ் (23) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர்.
ரைலி ருசோவ் 48 பந்துகளில 8 சிக்ஸ்கள், 7 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை விளாசினார்.
2ஆவது போட்டியில் அபார சதம் குவித்த டேவிட் மில்லர் இப் போட்டியில் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.