ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை, 50,000 பவுண்ட்ஸ் அபராதம்

போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 50,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ப்றீமியர் லீக் போட்டியொன்றின்போது இளம் ரசிகர் ஒருவரின் தொலைபேசியை தாக்கியமை தொடர்பான விசாரணைகளையடுத்து, இங்கிhந்து கால்பந்தாட்டச் சங்கத்தினால் நேற்று புதன்கிழமை (23) இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மென்செஸ்டர் கழகத்தில் விளையாடி வந்த ரொனால்டோ, அக்கழகத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என அக்கழகம் நேற்று முன்தினம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி நடைபெற்ற எவர்டன் கழகத்துடனான போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் 1:0 விகிதத்தில் தோல்வியடைந்திருந்தது. இப்போட்டியின் பின்னர் ரொனால்டோ மைதானத்திலிருந்து வெளியேறியபோது, 14 வயதான ஒரு ரசிகரின் தொலைபேசியை அவர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரினாலும் ரொனால்டோ எச்சரிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளையடுத்து, இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்தின் ஒழுக்க விதிகளை மீறியதால் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடையும் 50,000 பவுண்ட்ஸ் அபராதமும் விதிக்கப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய கழகமொன்றில் இணைந்தபின் 2 போட்டிகளில் விளையாடுவதற்கான தடை அமுல்படுத்தப்படும்.

உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் ரொனால்டோவுக்கு இத்தடை பாதிப்பை ஏற்படுத்தாது.

ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணி, இன்று தனது முதல் போட்டியில் கானாவை எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்தி

மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து ரொனால்டோ வெளியேறினார்

மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நான் விலக நிர்ப்பந்திப்பதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சி: ரொனால்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *