‘லிஸ்டீரியா’ நோய் குறித்து வீண் அச்சம் வேண்டாம் ; இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(எம்.மனோசித்ரா)

இரத்தினபுரி மாவட்டத்தில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் ‘லிஸ்டீரியா’ என்ற நோய் பரவக் கூடிய அபாயம் இல்லை என்பதால் மக்கள் அதுகுறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்களில் சிலர் ‘லிஸ்டீரியா’ என்ற நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதோடு , இதனால் இரத்தினபுரி வைத்தியசாலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அண்மையில் சிவனொளிபாதமலை யாத்திரை சென்று வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அதற்கமைய அப்பெண் உட்கொண்ட உணவுகள் , உணவு பெற்றுக் கொண்ட கடைகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை சிவனொளிபாதமலையை அண்மித்த நல்லதண்ணி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளில் உணவுகளின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இம்மாதத்தின் முதல் வாரத்தில் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்களில் சிலருக்கு வாந்தி , தலைவலி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகின. இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது ‘லிஸ்டீரியா’ என்ற நோய் என இனங்காணப்பட்டுள்ளதோடு , இதனால் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தொற்று நோய் பிரிவு மற்றும் மருத்துவ ஆய்வு கூடம் என்பன தமது ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன. இதனால் உயிரிழந்த பெண்ணுக்கு எவ்வாறு ‘லிஸ்டீரியா’  நோய் நிலைமை ஏற்பட்டது என்பது தொடர்பிலும் , வேறு எவரேனும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலும் இதன் போது ஆராயப்படவுள்ளது.

தரமற்ற உணவுகளால் உடலில் பற்றீரியா தொற்று ஏற்படுவதால் ‘லிஸ்டீரியா’ என்ற நோய் நிலைமை ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *