வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள சிறுபான்மை கட்சிகள் ஒன்றுசேர்ந்து செயல்படாவிடில் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. பணிப்பாளர் யட்சன் பிகிராடோ

வாஸ் கூஞ்ஞ)

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து சிறுபான்மை கட்சிகள் ஒரே குடையின் கீழ் நின்று எமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் மட்டுமே நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். இதற்கு தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என ‘மெசிடோ’ நிறுவனத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் யட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

கெரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் என்ற தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும்  முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் 33 வது தினம் வெள்ளிக்கிழமை (02.09.2022) காலை மன்னார் சிலாவத்துறையில் இடம்பெற்றது.

தமிழ் முஸ்லீம் மக்கள் கலந்து கொண்ட இது தொடர்பான கவனயீர்ப்பு போராட்டத்தின்போது’மெசிடோ’ நிறுவனத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் யட்சன் பிகிராடோ கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றும்போது

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் என்ற தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் இது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் சிறுபான்மை மக்கள் ஒன்றுகூடி தங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இவ் கவனயீர்ப்பு போராட்டம் 100 நாட்கள் திட்டமாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் 33 வது தினம் மன்னாரில்  சிலாவத்துறையில் தமிழ் முஸ்லீம் மக்கள் நாம் ஒன்றுகூடி இவ் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதுடன் இங்குள்ள மக்களின் குரலையும் கேட்டறிய இருக்கின்றோம்.

எமக்கு அரசியல் தீர்வு ஒன்று  எட்டப்பட வேண்டும். இதற்கு தமிழ் பேசுகின்ற  சிறுபான்மை மக்கள் அனைவரினதும் ஒருமித்த குரலாக அமைய வேண்டும்.

எமது மக்கள் மத்தியில் பல கட்சிகள் பிரிந்து நின்று எமது உரிமையை வென்றெடுக்க முடியாது. வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து சிறுபான்மை கட்சிகள் ஒரே குடையின் கீழ் நின்று எமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் மட்டுமே நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

இதுதான் எமது குரலாக இருக்கின்றது. இது ஒருவரின் தனிப்பட்ட கருத்தாக அமையாது எமது மக்கள் யாவரினதும் கருத்துகளாக அமைய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் திட்டம் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாகவோ அல்லது ஏனைய சமூகங்களுக்கு எதிரானதல்ல. எமது கருத்துக்களை பொது வெளியில் வெளிப்படுத்தவும் இவை அரசுக்கும்  சர்வதேசத்துக்கும் எட்டப்பட வேண்டும்.

இங்கு தலைமைத்துவத்தால் முன்வைக்கப்படும் திட்டங்கள் ஒரு தீர்வல்ல அனைத்து மக்களும் ஒன்றுசேர்ந்து முன்வைக்கப்படும் கருத்துக்களை  ஆராய்ந்து எடுத்துச் செல்வதே அது நலனாக அமையும்.

அப்பொழுதுதான் அது நிரந்தர பெறுமதியான உறுதியான தீர்வாக அமையும்.. ஆகவேதான் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றினைந்து இவ்விடயத்தில் செயல்பட வேண்டும் என ‘மெசிடோ’ நிறுவனத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் யட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *