வன்னி மண் கஷ்ட காலத்திலும் உதைபந்தாட்டத்தை அருமையாக பேணி வந்த மண் – இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர்

வன்னி மண் எந்த கஷ்ட்ட காலத்திலும் திறமைக்கு ஒரு குறைவுமில்லாமல் உதைபந்தாட்டத்தை அருமையாக பேணி வந்த மண் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்மர் உமர் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வன்னி மண் எந்த கஷ்ட்ட காலத்திலும் திறமைக்கு ஒரு குறைவுமில்லாமல் உதைபந்தாட்டத்தை அருமையாக பேணி வந்துகொண்டிருந்த மண். ஆகையால் திறமை பற்றி பேச வேண்டிய முக்கியத்துவம் இங்கு இல்லை.

முக்கியமாக இங்கே கூற வேண்டிய விடயம் என்னவென்றால் சில கழகங்கள் வவுனியா மாவட்ட உதைபந்தாட்டத்தில் இருக்கும் நல்ல வேலைகளை புறக்கணித்து பிளவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு சில விடயங்களை எடுத்து செல்வதாக குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன.

வவுனியாவில் உதைபந்தாட்டம் சார்பாக வவுனியா மண்ணிற்கு இருப்பது ஒரு லீக் மட்டும் தான் அந்த லீக்கிற்கு மட்டுமே அங்கிகாரம் இருக்கின்றது. யாருக்காவது இந்த லீக்கிற்கு வர வேண்டும், தலைமைத்துவத்தை எடுக்க வேண்டும், லீக்கிற்கு பிரதிநிதியாக வரவேண்டும் என்று விருப்பங்கள் இருந்தால் சரியான முறையில் கழகங்களோடு பேசி, கழகங்களை அமைத்து, அங்கத்துவம் பெற்று, விளையாடி, சரியான முறையில் போட்டியிட்டு, உங்களின் வாக்குகளினால் யாரும் வருவார்களாக இருந்தால் அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

அதனை தவிர வேறு ஒரு லீக் எனும் பெயரிலோ அல்லது வேறு ஒரு லீக் உருவாக்கப்படும் எங்களது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஆயுட்காலம் என்னும் சிறிது காலத்தில் முடிவடைந்துவிடும். இன்னுமொரு நிர்வாகம் வரும். அதனால் வேறொரு லீக் ஆரம்பிக்கப்படும் என்கின்ற கருத்துக்களெல்லாம் உண்மைக்கு புறம்பானது. இவ்வாறான வதந்திகள், இத்தகைய நிலைப்பாடுகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் இல்லை.

நான் இருந்தாலும், யார் இருந்தாலும் இது தான் எங்களுடைய இறுதி தீர்மானம்.

விளையாட்டு என்பது விளையாட்டு போட்டிகள் நடாத்தும் போதும், ஓர் மைதானங்களை உருவாக்கும் போதும் இரண்டு வைத்தியசாலைகளுக்கு சமன் என்று கூறுவார்கள்.

ஆரோக்கியமான மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாட்டுக்கு மதிப்பளித்து ஊக்குவிக்க வேண்டும்.

அதை தவிர்த்து பிளவுகளை உருவாக்கி பிரிந்து சென்றால் வன்னி மண்ணில் இருக்கும் திறமைகள் தேசிய மட்டங்களுக்கு வராமல் மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்பது தான் அர்த்தம்.

எங்களை பொறுத்தமட்டில் ஒரு லீக்கினை தான் நாங்கள் அங்கிகாரமாக எடுத்து கொள்ள முடியும். லீக்கின் மூலம் நடைபெறும் விடயங்களை தான் தேசிய மட்டத்தில் தாய்ச்சங்கமாக ஏற்றுக்கொள்ள முடியும். அதற்கு புறம்பாக இருக்கும் விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

வவுனியாவில் நிறைய உதைபந்தாட்டங்கள் இருக்கின்றன. வசதிகள் குறைவாகவே இருந்தாலும் விரைவான காலங்களில் வன்னி மண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய விடயங்களை செய்திருக்கின்றோம்.

வெகுவிரைவில் இரவு பகலாக விளையாடக்கூடிய சிறந்த மைதானம் ஒன்றை நிச்சயமாக இந்த மண்ணிற்கு பெற்று தருவேன் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *