‘கொன்றால் பாவம்’ எனும் திரைப்படம், கன்னடத்தில் வெளியான நாவலை தழுவி, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம்.
தகுதிக்கு மீறி ஒருவர் ஆசைப்பட்டால்… அவருக்கு எம்மாதிரியான அனுபவம் நேரிடும் என்பதனை சுவாரசியமான படைப்பாக உருவாக்கி இருக்கிறேன் என படத்தின் இயக்குநர் தயாள் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் இயக்குநரும், தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘கொன்றால் பாவம்’.
இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை வரலட்சுமி சரத்குமார், ஈஸ்வரி ராவ், மனோபாலா, சுப்ரமணிய சிவா, சார்லி, யாசர், சென்றாயன், கவிதா பாரதி, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கன்னட நாவலை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐந்ஃபேக் ஸ்டுடியோஸ் மற்றும் டி பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் தயாள் பத்மநாபன், பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகர் சரத்குமார் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இந்நிகழ்வில் இயக்குநர் தயாள் பத்மநாபன் பேசுகையில், “எனக்கு பூர்வீகம் தமிழகம் தான். தாயின் விருப்பத்திற்காக மத்திய அரசு ஊழியராக பணியாற்றி, திருமணமான பிறகு மனைவியிடம் அனுமதி வாங்கி திரைத்துறையில் நுழைந்தேன். கன்னடத்தில் படங்களை இயக்கி வெற்றி பெற்றேன். பிறகு அங்கு தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். ‘கொன்றால் பாவம்’ படத்தை முதலில் கன்னடத்தில் இயக்கினேன். படம் படத்திற்கு மாநில விருது கிடைத்தது. பிறகு இந்தத் திரைப்படத்தை பார்த்த தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தெலுங்கு மொழியில் மறு உருவாக்கம் செய்து வெளியிட்டார். அங்கும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தமிழில் இயக்க வேண்டும் என தீர்மானித்த பிறகு, நடிகை வரலட்சுமி சரத்குமாரை அணுகி கதையை சொன்னவுடன் மறுக்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டார். அவருடைய நடிப்புத் திறமை, இந்த திரைப்படத்தில் முழுமையாக வேறொரு கோணத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆங்கிலத்தில் வெளியான நாடகம் ஒன்றை, கன்னட எழுத்தாளர் ஒருவர் நாவலாக எழுதியிருந்தார். பொதுவாக மேலத்தேய இலக்கியங்களை இந்திய வாசிப்பு சூழலுக்கு ஏற்ற வகையிலும், இந்திய கலாச்சார பின்னணியிலும் எழுதுவதில் கன்னட படைப்பாளிகளும், மலையாள படைப்பாளிகளும் முதன்மையான இடத்தில் இருக்கிறார்கள். இந்த நாவலை வாசித்தவுடன் இது ஏன் இன்னும் திரைப்படமாக உருவாகவில்லை? என்ற வியப்பு ஏற்பட்டது. பிறகு நாவலாசிரியரை சந்தித்து உரிய அனுமதி பெற்று கன்னடத்தில் திரைப்படமாக உருவாக்கினேன்.
கன்னடத்தில் வெற்றிகரமான தயாரிப்பாளராக.. இயக்குநராக இருந்தாலும், பிறந்த மண்ணில் நல்ல தரமான படைப்புகளுடன் அறிமுகமாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கு ‘கொன்றால் பாவம்’ சரியான படைப்பாக இருக்கும் என்று கருதி இதனை தமிழில் தயாரித்து இயக்கியிருக்கிறேன்.
இந்தப் படத்திற்கு பின்னணி இசை, மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கி இருக்கிறது. இசைக் கலைஞர் ஜிகே வெங்கடேஷின் பின்னணி இசைப் பாணியை… எப்படி இசைஞானி இளையராஜா தொடர்ந்து கடைபிடிக்கிறாரோ…! அதே பாணியை இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி. எஸ்ஸும் பின்பற்றி இருக்கிறார். அதனால் இந்த திரைப்படம் தனித்துவமான படைப்பாக தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.