நாகாலாந்தில் முதல்முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏவாக தேர்வாகி வரலாறு படைத்துள்ளார்.

நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 85.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் இந்த கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தக் கூட்டணியின் சார்பில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராக திமாபூர்-III தொகுதியில் களமிறக்கப்பட்ட பெண் வேட்பாளரான ஹெகானி ஜக்காலு வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)-யின் வேட்பாளர் அஜெட்டோ ஜிமோமியைவிட 1,536 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நாகாலாந்தின் முதல் பெண் வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

48 வயதாகும் ஹெகானி ஜக்காலு அமெரிக்காவில் சட்டம் பயின்றவர். சமூக தொழில்முனைவோராக அறியப்படுபவர். யூத்நெட் என்ற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வரும் இவர், இதன்மூலம் இளைஞர்களுக்கு கல்வியும், திறன் மேம்பாடும் அளித்து வருகிறார்.

நாகாலாந்து சமூகம் ஆணாதிக்கமாக உள்ளது; என்றாலும் மக்களின் மனநிலை மாறி வருகிறது என தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹெகானி ஜக்காலு  தெரிவித்திருந்தார். ஹெகானி ஜக்காலு வெற்றி பெற்றிருப்பதோடு, அவரது கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளதால் அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *