( வாஸ் கூஞ்ஞ) 13.10.2022
காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு அரசு இரண்டு இலட்சம் ரூபா தரவேண்டிய அவசியம் இல்லை. மாறாக நாங்கள் நான்கு இலட்சம் ரூபா தருகின்றோம் ஆனால் நீங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என வெளிப்படையாகச் தெரிவியுங்கள் என மன்னார் மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக இதன் தலைவி மனுவேல் உதயச்சந்திரா இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக இதன் தலைவி மனுவேல் உதயச்சந்திரா வியாழக்கிழமை (13.10.2022) ஊடகச் சந்திப்பின்போது தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில்
இன்றைய ஜனாதிபதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவினர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் அத்துடன் மரண சான்றிதழ்களும் தருவதாக தெரியப்படுத்தியுள்ளார்.
இவ்விடயம் எமக்கு எற்கனவே தெரிவிக்கப்பட்ட விடயமே அதாவது ஒரு இலட்சம் ரூபா தருவதாக அன்று தெரிவிக்க்பட்டது.
இது சுமார் நான்கு வருடங்களுக்கு முன் எமக்கு தெரியப்படுத்தப்பட்டது.. இதற்கான வட்டியுடன்தான் தற்பொழுது நான்கு இலட்சமாக இது மாறியுள்ளது..
இன்றைய ஜனாதிபதிக்கு எங்கள் விடயம் முழுதும் நன்கு தெரியும். எங்கள் பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதும் பிரச்சனைகளுக்கு ஒரு காரணகத்தாவாக இருப்பவரும் இன்றைய ஜனாதிபதியும்தான்.
ஆட்சிபீடம் ஏறுகின்ற எந்த அரசும் பாதிக்கப்பட்ட எங்களுக்காக எங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் செயல்படவில்லை.
ஆனால் இந்த அரசுகள் தங்கள் மக்களையும் தங்கள் இராணுவத்தையும் போர் குற்றங்களை செய்தவர்களுக்கு ஆதரவு வழங்கும் அரசாங்களாகவே காணப்படுகின்றன.
தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலேயே அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நாட்களாக தொடர்ந்து வீதியில் தங்கள் பிள்ளைகளுக்காக ஏங்கிக் கொண்டு இருப்பதை கவனத்தில் எடுக்கப்படாமல் பாராமுகமாக இருக்கின்றது அரசு
இவர்களிடம் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக நிதி கேட்டு நிற்கவில்லை. கையில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்றுதான் கேட்டு நிற்கின்றோம்.
ஏற்கனவே இது தொடர்பாக எத்தனையோ ஆணைக்குழுவை நியமித்திருந்தனர் இப்பொழுது இந்த ஜனாதிபதி இன்னொரு ஆணைக்குழுவை நியமிக்கின்றார். இந்த ஆணைக்குழு முதலில் மட்டக்களப்பில் விசாரனையை ஆரம்பிக்கப் போகின்றதாம்.
விசாரனையை விடுத்து பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று சொல்லுங்கள் அல்லது பிள்ளைகளை கொன்று விட்டோம் என வெளிப்படையாக கூறுங்கள்.
உலக நாட்டையும் எங்களையும் தொடர்ந்து ஏமாற்றாதீர்கள். நீங்கள் இரண்டு இலட்சம் ரூபா தருவதாக தெரிவிக்கின்றீர்கள் எங்களுக்கு பணம் வேண்டாம் நாங்கள் உங்களுக்கு நாலு இலட்சம் ரூபா தருகின்றோம் எங்கள் பிள்ளைகளின் நிலையைச் சொல்லுங்கள்.
நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காகவும் நீதிக்காகவுமே தெருக்களில் நின்று குரல் கொடுக்கின்றோம்.
நீங்கள் ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லுவதெல்லாம் பொய் என்பது புலனாகின்றது சிறுபான்மையினர் மாற்றாந்தாய் பிள்ளைகளாகவே எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
தெருக்களில் தங்கள் பிள்ளைகளுக்காக ஏங்கி தவித்த எத்தனை தாய்மார் மரணித்துள்ளார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும் என இவ்வாறு தெரிவித்தார்.