வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

(பாஸ்கரன் கதீஷன்)

வுனியா மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 6 அகால மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்கிற விடயம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மார்ச் 7 – வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு 

வவுனியா, குட்செட் வீதியிலுள்ள உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் கடந்த 7ஆம் திகதி காலை மீட்கப்பட்டன.

இச்சம்பவத்தில் வீட்டின் குடும்பஸ்தர் சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கெ.வரதராஜினி (வயது 36) மற்றும்  இரு பிள்ளைகளான கெ.மைதிரா (வயது 9), கெ.கேசரா (வயது 3) ஆகியோர் உறங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதோடு இவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், அவர்களின் உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.

உயிரிழந்தவர்களது இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 9 – வவுனியா, பூவரசங்குளத்தில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் பலி

வவுனியா – பூவரசங்குளம், மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நித்திய நகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டதுடன், குறித்த இளைஞரின் சடலத்தில் காயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இது மதுபோதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்தனர்.

அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு நான்கு பேர் பூவரசங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 10 – வவுனியா ஏ9 வீதியில் மருத்துவரின் மகன் உயிரிழப்பு 

வவுனியா, ஏ9 வீதியிலுள்ள அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையிலுள்ள பிரபல வைத்தியரின் வீட்டில் அவரது மகன் செந்தில்காந்தன் லக்சிகன் (வயது 26) நேற்று முன்தினம் (10) மாலை நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக நிகழ்ந்த மரணங்களின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 6 அகால மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *