(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் இல்லை,தேர்தலை நடத்த நிதி இல்லை என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் வாக்குரிமையை மலினப்படுத்தியுள்ளார்.

வாக்குரிமை கோரி ஒட்டுமொத்த மக்களும் வீதிக்கு இறங்கினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மின்சார கட்டணம் 66 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறும் தரப்பினரிடமிருந்து 30 முதல் 40 சதவீதம் வரை வரி அறவிடப்படுகிறது.

தேர்தலை நடத்துமாறு நாட்டு மக்கள் வலியுறுத்துகின்றன நிலையில் ‘தேர்தல் இல்லை,தேர்தலை நடத்த பணம் இல்லை’என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் வாக்குரிமையை நகைப்புக்குள்ளாக்கியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது,ஆகையால் அவர் தேர்தல் குறித்து கவனம் செலுத்தமாட்டார்.

முற்பணமாக 1.1 பில்லியன் ரூபாவை திறைச்சேரி வழங்கினால் தேர்தலை நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. திறைச்சேரியிடம் 1.1 பில்லியன் ரூபா இல்லை என்பதை எவராலும் நம்ப முடியாது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தல் அவசியமான ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமைக்கு தடையாக உள்ள தரப்பினர் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு 60 முதல் 70 சதவீதம் வரை உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகளை குறைத்துள்ளது.

தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிட்டு மக்களின் வாக்குரிமையை மோசடி செய்யாமல் தேர்தலை நடத்த ஜனாதிபதி இடமளிக்க வேண்டும்.

வாக்குரிமையை கோரி நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக வீதிக்கு இறங்கினால் பாரதூரமான விளைவுகள் தோற்றம் பெறும் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *