(இராஜதுரை ஹஷான்)

இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பின் போது சகல தரப்பினருடன் நியாயமான பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எத்தரப்பிற்கும் விசேட சலுகை வழங்காத வகையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பிரதான நிலை வணிக தொழிற்துறையினருடன் 15 ஆம் திகதி புதன்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தூரநோக்கமற்ற தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.தவறான தீர்மானங்களினால் நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்பது குறித்து ஆராய்வதில் மாத்திரம் அவதானம் செலுத்தினால் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும்,எமது அரசியல் கொள்கைக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்று 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்பதால் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.

பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். எதிர்க்கட்சிகள் முன்வைத்த யோசனைகள் தற்போதைய நெருக்கடிக்கு துரிதகரமான தீர்வை பெற்றுக்கொடுக்காது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி கைச்சாத்திடப்படும்.முதல் தவணை கொடுப்பனவாக 300 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்பு விவகாரத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கின.

இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன்மறுசீரமைப்பின் போது சகல தரப்பினருடன் நியாயமான பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எத்தரப்பிற்கும் விசேட சலுகை வழங்காத வகையில் கடன்மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் வரி விதிப்புக்கு உள்வாங்கப்படாத தரப்பினர் தான் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மாதம் இலட்சகணக்கில் சம்பளம் பெறும் தரப்பினர் ஏன் வரி செலுத்த கூடாது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து வரி கொள்கை திருத்தியமைக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *