இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வரும் கலைஞர் விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வரும் ‘பிச்சைக்காரன் 2’ எனும் திரைப்படத்தின் முதல் நான்கு நிமிட காணொளி, பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக முன்னேற்றமடைந்திருக்கும் விஜய் அண்டனி, இயக்குநராகவும் அவதாரமெடுத்திருக்கும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்தத் திரைப்படத்தில் இவர் கதையின் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிகை காவ்யா தாபர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ராதா ரவி, வை. ஜி. மகேந்திரா, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெராடி, ஜோன் விஜய், யோகி பாபு, தேவ் கில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார்.
2016 ஆம் ஆண்டில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேஷன் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் விஜய் அண்டனி சிக்கி படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் நான்கு நிமிட காணொளியை பார்வையாளர்களுக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் பணம் உலகில் உள்ள அனைவரையும் கொன்றொழிக்கும் அபாயமான கருவி என டேக் லைனுடன் வெளியாகி இருப்பதால் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.