கனமழையையடுத்து விமானத்தை தரையிறக்கும் விமானியின் 3 ஆவது முயற்சியில் விமானம் புல்வெளிக்குள் நழுவிச்சென்றதால் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் பரபரப்பு நிலை உருவானது.

இவ்வாறு தரையிறங்கும்போது புல்வெளியில் பாய்ந்த விமானதில் இருந்து 173 பேர் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணித்த விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளானது.

விமானம் நேற்று இரவு பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க மேற்கொண்ட விமானியின் முயற்சி தோல்வியடைந்தது.

மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறங்க முற்பட்டார். அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தை விமானி தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளிக்குள் பாய்ந்தது. இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.

இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் உள்பட 173 பேரும் அவசரகால வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி தப்பித்தனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *