விராட் கோலி சாதனைச் சதம் ! ஆசிக் கிண்ண தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறின இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் !

பாகிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை (07) நடைபெற்ற போட்டியில் கடும் சவாலாக திகழ்ந்து கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்த ஆப்கானிஸ்தான் வியாழக்கிழமை (8) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டியில் படுதோல்வி அடைந்தது.

அப் போட்டியில் இந்தியா 101 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் விராத் கோஹ்லி குவித்த கன்னிச் சதம், புவ்ணேஷ்வர் குமார் பதிவு செய்த சாதனைமிகு 5 விக்கெட் குவியல் என்பன இந்தியாவின்  சுலபமான  வெற்றியில் முக்கிய பங்காற்றின.

ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது சதம் குவித்தவர் என்ற சாதனையை விராத் கோஹ்லியும் முதலாவது 5 விக்கெட் குவியலை பதிவு செய்தவர் என்ற சாதனையை புவ்ணேஷ்வர் குமாரும் நிலைநாட்டினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 212 ஒட்டங்களைக் குவித்தது.

இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடததால் கே. எல். ராகுல் அணித் தலைவராக விளையாடியதுடன் அவருடன் விராத் கோஹ்லி ஆரம்ப ஜோடியாக களம் இறங்கினார்.

இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 12.4 ஓவர்களில் 119 ஓட்டங்களைக் குவித்து நடப்பு ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினர்.

கே. எல். ராகுல் 41 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன 62 ஓட்ங்களைப் பெற்று ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 125 ஓட்டங்களாக இருந்தபோது சூரியகுமார் யாதவ் (6) களம் விட்டகன்றார்.

மறு பக்கத்தில் அற்புதமாக துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லியுடன் ரிஷாப் பன்ட் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

61 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 12 பவுண்டறிகள் 6 சிக்ஸ்கள் அடங்கலாக 122 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

கடந்த 12 வருடங்களாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் விராத் கோஹ்லி தனது 103ஆவது போட்டியில் முதலாவது சதத்தை குவித்தார்.

ரிஷாப் பன்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்தியா இழந்த 2 விககெட்களையும் 57 ஒட்டங்களுக்கு பரீத் அஹ்மத் கைப்பற்றினார்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான சாதனைமிகு 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் தனது முதல் 5 விக்கெட்களை வெறும் 20 ஓட்டங்களுக்கு பவர் ப்ளேக்குள் இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஹஸ்ரத்துல்லா ஸஸாய் (0), ரஹ்மானுல்லா குர்பாஸ் (0), கரிம் ஜனத் (2), நஜிபுல்லா ஸத்ரான் (0), மொஹமத் நபி (7) ஆகியோரே பவர் ப்ளேக்குள் ஆட்டமிழந்தவர்களாவர்.

7ஆவது ஓவரில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (7) 6ஆவதாக ஆட்டமிழந்தபோது ஆப்கானிஸ்தானுடைய மொத்த எண்ணிக்கை 21 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் மறுபக்கத்தில் தனி ஒருவராக போராடிய இப்ராஹிம் ஸத்ரான் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி ஆப்கானிஸ்தானின் மோசமான தோல்வியைத் தவிர்த்தார்.

அவர் ராஷித் கானுடன் 7ஆவது விக்கெட்டிலும் முஜீப் உர் ரஹமானுடன் 8ஆவது விக்கெட்டிலும் தலா 33 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் நிநைவில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இப்ராஹிம் ஸத்ரான் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

59 பந்துகளை  எதிர்கொண்ட இப்ராஹிம் ஸத்ரான் 4 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் அடித்தார். மறுமுனையில் பரீத் அஹ்மத் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்திய பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 4 ஒவர்களில் 4 ஓட்டங்களுக்கு 5 விக்டெகளைக் கைப்பற்றினார். இது ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அதி சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும்.

இந்த போட்டியில் சாதனைகளுக்கு மத்தியில் இந்தியா வெற்றிபெற்றபோதிலும் ஆப்கானிஸ்தானுடன்  இந்தியாவும்  ஏமாற்றத்துடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *