விளையாட்டுத்துறை வெற்றிக்காக தேசிய ஒலிம்பிக் குழு தயாரிக்கும் மூலோபாயத் திட்டம்

(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறையில் வெற்றிகளை ஈட்டும் நோக்கில் இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு ஒரு மூலோபாய மேம்பாட்டுத் திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பேராசிரியர் இம்மானுவேல் பாய்ல், பேராசிரியர் பி.எல்.எச். பெரேரா மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் உயர் அதிகாரிகள் ஆகியோரின் தீவிரமான மேற்பார்வையில்  அடுத்த 10 வருடங்களைக் கருத்தில் கொண்டு  இந்தத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

2032ஆம் ஆண்டுவரை நாட்டிலுள்ள விளையாட்டுத்துறை சமூகத்திற்கு களத்தின் உள்ளேயும் களத்திற்கு வெளியேயும் உதவும் வகையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

முலோபாயத் திட்டம் ஒரு புறமிருக்க, 4  வருடங்களுக்கு ஒருமுறை ஆற்றல் வெளிப்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படும்.

மூலோபாய திட்டக் குழுவினரும் தேசிய ஒலிம்பிக் குழுவினரும் தங்களது திட்டமிடல் செயல்முறையின்போது பலம் மற்றம் பலவீனங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளனர்.

தேசிய ஒலிம்பிக் குழு 1937இல் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இந்த சவால் மிக்க பணி குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இது தொடர்பாக ஒலிம்பிக் இல்ல ஹேமசிறி பெர்னாண்டோ கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது விளக்கம் அளித்த தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா,

‘தேசிய ஒலிம்பிக் குழு 1937இலிருந்து இயங்கி வருகிறது என்பதை நான் முதலில் குறிப்பிடவேண்டும். அன்றிலிருந்து இற்றைவரையான இந்த காலகட்டத்தில் நாங்கள் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளோம் என்பதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுவில் அடுத்தடுத்து செயற்பட்ட குழுக்களால் நிறைய பணிகள் ஆற்றப்பட்டன. அவற்றில் வெற்றி மற்றும் ஏமாற்றத்தின் தருணங்கள் இருந்தன. ஆனால் அவற்றை எல்லாம் நாம் மீட்டுப் பார்க்கும்போது, இதனைவிட எம்மால் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

‘உண்மையில், கடந்த கால நிகழ்வுகளை எங்களால் மாற்ற முடியாது. ஆனால், ஒன்றாகச் செயல்படுவதன் மூலம் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் எங்களால் மாற்ற முடியும்.  நாங்கள் ஒன்றுகூடுவதில்லை என்ற ஒரு புகார் முன்னர் இருந்தது.

அதுமட்டுமல்லாமல் என்ன நடக்கிறது என்பதை விளையாட்டு வீரர்கள் அறிந்திருக்கவில்லை. சங்கங்கள், சம்மேளனங்களுக்கு நாங்கள் செவிமடுப்பதில்லை என விமர்சிக்கப்பட்டது.

எனவே, இக்கட்டான காலகட்டத்தை நாடு எதிர்நோக்கி வரும் இவ் வேளையில், அனைவரையும் ஒன்றிணைப்பது மற்றும்  வேற்றுமையில் ஒற்றுமை என்பன புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நினைத்தோம்.

கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதற்காக நாம் ஒன்றாக இல்லை என்று அர்த்தம் இல்லை. நாங்கள் தயாரிக்கும் இந்த மூலோபாயத் திட்டம் உங்களுக்கானது. உங்கள் தேவைகளைப் புரிந்துகொள்வதற்காக இது உதவும்.

இதன் மூலம் நீங்கள் எவ்வாறு சிறந்த பெறுபேறுகளை ஈட்டுகிறீர்கள், நாட்டில் எவ்வாறு விளையாட்டுத்துறை முன்னோக்கி நகர்கிறது என்பதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும்’ என்றார்.

இந்த திட்டமிடலின்போது, 33 அங்கத்துவ சம்மேளனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியன குறித்து தேசிய ஒலிம்பிக் குழு மிகவும் விரிவாக நோக்கியதுடன் அவை சார்ந்த புரிந்துணர்வையும் கொண்டிருந்தது.

அந்த புரிந்துணர்வின் மூலம் இலங்கையில் சிறந்த விளையாட்டு சமூகத்தை வளர்ப்பதற்கான இறுதி இலக்குக்கு உதவக்கூடிய முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை ஏற்படுத்த முடியும் என தேசிய ஒலிம்பிக் குழுவினர் உறுதிக் செய்தனர்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் பேராசிரியர் இம்மானுவேல், கூட்டு மூலோபாயத்தின் முக்கியத்துவம் பற்றி பேசியபோது மூலோபாயத் திட்டமிடல் குறித்து விளக்கினார்.

‘இலங்கைக்கு, குறிப்பாக விளையாட்டுத்துறை சம்மேளனங்களுக்கும் தேசிய ஒலிம்பிக் குழுவுக்கும் ஒரு மூலோபாயத் திட்டம் ஏன் அவசியம் என்பதை நான் சுருக்கமாக முன்வைக்கிறேன்.

வலுவான மற்றும் ஒருங்கிணைந்த தேசிய விளையாட்டு அமைப்பு மற்றும் தேசிய விளையாட்டுக் கொள்கையை நீங்கள் எவ்வாறு உருவாக்க முடியும் என்பது பற்றி நான் முதலில் பேசுவேன்.

ஏனெனில் தனித்தனியே தேசிய ஒலிம்பிக் குழுவும் தேசிய விளையாட்டுத்துறை சம்மேளனங்களும் செயல்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. உண்மையில் நாங்கள் ஒரு உறுதியான பங்காளித்துவத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

‘ஒவ்வொரு நாட்டிலும் விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன.

எனவே, தேசிய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் விளையாட்டுத்துறை சம்மேளனங்களுக்கான மூலோபாய திட்டத்தை உருவாக்க, காலவரையறைகள் மிகவும் முக்கியமானது.

உங்கள் விளையாட்டை மேலும் முன்னேற்றுவதற்கு, வெற்றிகரமான கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்கு, விளையாட்டு முறைமையை மாற்றும் போது, தகவல்தொடர்புக்கான ஒரு கருவியாக அமைவதே வியூகத் திட்டம் ஆகும்’ என பேராசியர் இம்மானுவேல் பாய்ல்; குறிப்பிட்டார்.

முகாமைத்துவக் குழுத் தலைவர் பேராசிரியர் பி.எல்.எச். பெரேராவும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர்நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிதொரு கலந்துரையாடலின்போது சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ரீ. பி. ரஹமான் (சண்டே ஒப்சேர்வர்), நெவில் அன்தனி (வீரகேசரி), நௌஷாத் அமித் (சண்டே டைம்ஸ்), ஹரித்த பெரேரா (சுயாதீன விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்), இளம் ஊடகவியலாளர் சத்துக்க (ஐரிஎன்) ஆகியோர் மூலோபாயத் திட்டத்திற்கான தத்தமது யோசனைகளை முன்வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *