( வாஸ் கூஞ்ஞ) 13.10.2022
விவசாயிகள் தொடர்பாக அன்மையில் அரசால் தெரிவிக்கப்பட்ட சலுகைகள் எந்த விடயமும் நடைமுறைகளுக்கு வரவில்லை. மன்னார் மாவட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர் என மன்னாரில் இடம்பெற்ற விவசாயக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாகக் காணப்படும் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் நடப்பு வருடமாகிய 2022 – 2023 மேற்கொள்ளப்படும் காலபோக நெற் செய்கை தொடர்பான கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் உயிலங்குளத்தில் புதன்கிழமை (12.10.2022) இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் பிரஸ்தாபிக்கையில் கடந்த காலபோக விவசாய நெற்செய்கையில் அரசானது இரசாயன பசளை விநியோகத்தை இடைநிறுத்தி அனைத்து விவசாயிகளும் சேதன பசளையை பயன்படுத்தியே நெற்செய்கையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
இதன் காரணமாக மன்னார் மாவட்ட்தில் அதிகமான விவசாயிகள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தனர்.
இதில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என அரசு அன்று தெரிவிந்திருந்தது. ஆனால் இன்று வரை அது நடைமுறைக்கு வராது இருக்கின்றது.
இவ்வாறு வங்கிகளில் விவசாயக் கடன் பெற்றவர்களுக்கு இவ் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுவும் விவசாயிகளுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருந்து வருகின்றது. என இவ் கூட்டத்தில் விவசாயிகளின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர்.