
அவுஸ்திரேலியாவின் பல நகரங்கள் கடும் மழைவெள்ளத்தில் சிக்குண்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தாஸ்மேனியாவின் வடபகுதியில் மழை வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்காக அவசரசேவை பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக பல நகரங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே மீட்பு நடவடிக்கைகளிற்காக அவசரசேவை பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தாஸ்மேனியாவின் வடமேற்கில் மக்களை வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளும் எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.
ரெயில்டன் நகரில் 90 வீடுகள் வெள்ளத்தில் சிக்குப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
லிபேயில் வாகனமொன்று வெள்ளநீரில் சிக்குண்டுள்ளது மீட்பு பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தாஸ்மேனியாவின் வடபகுதியில் வெள்ளிக்கிழமை வரை கடும் மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மெல்பேர்னின் வடபகுதி நகரான ரொச்செஸ்டரில் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பகுதிகளை சேர்ந்த மக்களை தாழ்நிலப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மழை தொடர்வதால் வெள்ளநீர் அதிகரிக்கின்றது 1974 ம் ஆண்டை போல ஆபத்தான நிலையேற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பல இடங்களிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை பல பகுதிகளில் நிலைமை வேகமாக மாற்றமடைந்து வருகின்றது.
விக்டோரியாவில் இதுவரை 70 எச்சரிக்கைககள் விடுக்கப்பட்டுள்ள அதேவேளை 179 சொத்துக்கள் வெள்ளத்தில் சிக்குண்டுள்ளன.
விக்டோரியாவில் கடந்த 36 மணிநேரத்தில் 166 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் மழை பெய்கின்றது என விக்டோரியாவின்; அவசர முகாமைத்துவ முகாமையாளர் அன்ரூ கிறிஸ்ப் தெரிவித்துள்ளார்.
சுமார் 10000க்கும் அதிகமானவர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
40 பாடசாலைகளும் முன்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன 89 பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.