நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகி வரும் ‘டீசல்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பச்ச குத்திக்கின ஒன்னோட பேர..’ என தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகரும், இயக்குநருமான சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘டீசல்’. இதில் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் வினய், சாய்குமார், அனயா, விவேக் பிரசன்னா, தங்கதுரை, கே பி வை தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார். காதலும் கொமர்சலும் இணைந்த இந்தத் திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பச்ச குத்திகின ஒன்னோட பேர.. வழில குட்ச்சேனடி டென் தௌசண்ட் பீர.. ‘என தொடங்கும் பாடலை பாடலாசிரியர் ரோகேஷ் எழுத, பின்னணி பாடகர் கானா பாலா பாடியிருக்கிறார். இந்தப் பாடல் பெப்ரவரி 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு ‘பீர் சாங்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. கானா பாடல் வகையில் அமைந்திருக்கும் இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இந்திய அளவில் இந்த பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.