15 வருட உலகக் கிண்ண காத்திருப்புக்கு முடிவு கட்டுமா இந்தியா?

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 15 வருடங்களின் பின்னர் சம்பியனாகும் குறிக்கோளுடன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 8ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தை எதிர்கொள்கிறது.

2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்தில் எம்.எஸ். தோனி தலைமையில் சம்பியனான இந்தியா, 7 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் இலங்கையிடம் தோல்வி அடைந்து கிண்ணத்தை தவறவிட்டது.

இப்போது அதி சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், சகலதுறை வீரர்கள், திறமையான பந்துவீச்சாளர்களுடன் 15 வருட காத்திருப்புக்கு முடிவுகட்டி சம்பியனாகும் குறிக்கோளுடன் இந்தியா 8ஆவது ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தை எதிர்கொள்ளவுள்ளது.

நட்சத்திர வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா, சகலதுறை வீரர் ரவிந்த்ர ஜடேஜா ஆகியோர் உபாதைக்குள்ளாகி அணியில் இல்லாதது இந்திய அணிக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்தது.

அவர்கள் இருவருக்குப் பதிலாக மொஹமத் ஷமியும் அக்சார் பட்டேலும் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுடனான பயிற்சிப் போட்டியின் கடைசி நான்கு பந்துகளில் மொஹமத் ஷமி 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியதுடன் பும்ராவுக்கு சரியான பதில்வீரர் தானே என்பதையும் நிரூபித்தார்.

பங்களாதேஷ், பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, ஸிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் சுப்பர் 12 சுற்றில் குழு 2இல் இந்தியா இடம்பெறுகிறது.

இந்தயா ஆரம்பப் போட்டியில் தனது பரம வைரியான பாகிஸ்தானை மெல்பர்னில் அக்டோபர் 23ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

இந்தியாவின் குறி எல்லாம் போட்டிகளில் வெற்றிபெற்று இறுதியில் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பதாகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர் 12 சுற்றுடன் இந்தியா வெளியேறியிருந்தது. அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்களால் தோல்வியும் அடைந்திருந்தது.

இந்த வருடம் சுப்பர் 12 சுற்றில் தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து உலகக் கிண்ண வெற்றிக்கு இந்தியா அத்திவாரம் இட உள்ளது.

பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெறுவதானது இந்தியாவிடமிருந்து பெரிய சுமை குறைவதாக அமையும்.

வரலாறு

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் சம்பியனான பின்னர் இந்தியாவின் உலகக் கிண்ண வரலாறு குழப்பகரமாகவே இருந்து வருகிறது.

ஜொஹானெஸ்பேர்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இர்பான் பத்தான் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியதன் பலனாக  பாகிஸ்தானை 5 ஓட்டங்களால் வெற்றிகொண்டு இந்தியா உலக சம்பியனாகியிருந்தது.

அடுத்து 3 உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் சுப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய இந்தியா, 2014இல் இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்தது. ஆனால், குமார் சங்கக்கார, திசர பெரேரா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் சம்பியனாகும் இந்தியாவின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி ன. .

மேற்கிந்தியத் தீவுகளில் 2016இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதியில் இந்தியா தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது.

அண்மைய பெறுபேறுகள்

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் அண்மைக்கால பெறுபேறுகள் இந்தியாவுக்கு திருப்தி கொடுப்பதாக அமைகிறது.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தின்போது ஈட்பட்ட 2 – 1 தொடர் வெற்றி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஈட்டப்பட்ட 4 – 1 தொடர் வெற்றி, நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஈட்டப்பட்ட 2 – 1 தொடர் வெற்றி, தென் ஆபிரிக்காவுக்கு  எதிராக ஈட்டப்பட்ட 2 – 1 தொடர்  வெற்றி என்பன உலகக் கிண்ணத்தை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது.

இவற்றைவிட உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டமை இந்தியாவுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

சிறந்த வீரர்கள்

இந்தியாவில் துடுப்பாட்ட வீரர்களுக்கும் பந்ந்துவிச்சாளர்களுக்கும் பஞ்சமே இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு அணிகளை களம் இறக்கக்கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு அணிகளை சர்வதேச அரங்கில் இறக்கியிருந்ததை அணமைக்காலங்ககளில் காணக்கூடியதாக இருந்தது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவித்த வீரர்கள் இந்திய அணியில் தாராளமாக இருக்கின்றனர்.

ரோஹித் ஷர்மா (3737 ஓட்டங்கள், 4 சதங்கள், 28 அரைச் சதங்கள்), விராத் கோஹ்லி (3712 ஓட்டங்கள், ஒரு சதம், 33 அரைச் சதங்கள்), கே. எல். ராகுல் (2137 ஓட்டங்கள், 2 சதங்கள், 20 அரைச் சதங்கள்), சூரியகுமார் யாதவ் (1045 ஓட்டங்கள், ஒரு சதம், 9 அரைச் சதங்கள்), ஷ்ரேயஸ் ஐயர் (1030 ஓட்டங்கள், 7 அரைச் சதங்கள்) ஆகியோர் 1000 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

ஹார்திக் பாண்டியா (989 ஓட்டங்கள், 2 அரைச் சதங்கள்), ரிஷாப் பன்ட் (961 ஓட்டங்கள், 3 அரைச் சதங்கள்) ஆகியோர் 1000 ஓட்டங்களை அண்மித்துள்ளனர்.

பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் (95 விக்கெட்கள்), யுஸ்வேந்த்ர சஹால் (85 விக்கெட்கள்), ரவிச்சந்திரன் அஷ்வின் (66 விக்கெட்கள்) ஹார்திக் பாண்டியா (54 விக்கெட்கள்) ஆகியோர் 50 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய அணியில் இடம்பெறும் பிரதான வீரர்களாவர்.

அவர்களுடன் அர்ஷ்தீப் சிங், தீப்பக் ஹூடா, தினேஷ் கார்த்திக், மொஹமத் ஷமி, ஹர்ஷால் பட்டேல் ஆகியோரும் இந்திய குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *