சீனாவில் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் 792 பேர் உயிரிழந்தோ அல்லது காணாமல் போயோ உள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், உறைபனி காலநிலை, பனிப்புயல், மணல் புயல், காட்டுத் தீ மற்றும் கடல் பேரழிவுகள் காரணமாக சீனாவில் மொத்தம் 94.94 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, குறைந்தது 1.75 மில்லியன் வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, சுமார் 10,583 ஹெக்டயர் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தங்கள் 44.37 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சீன அதிகாரிகளின் தரவுகளை மேற்கோள் காட்டி குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் பாதியில் குறைந்தது 156 பேர் இறந்ததாக அல்லது காணாமல் போனதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், மத்திய சீனாவின் ஹெனான் மற்றும் ஹூபே மாகாணங்களில் புயல்கள் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தின. மத்திய சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாக சராசரியாக 185.6 மிமீ மழை பெய்துள்ளது.